திண்டுக்கல் குடைபாறைபட்டியில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் இந்து முன்னணியினர் கைது


திண்டுக்கல் குடைபாறைபட்டியில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் இந்து முன்னணியினர் கைது
x
தினத்தந்தி 23 Aug 2020 2:10 AM GMT (Updated: 23 Aug 2020 2:10 AM GMT)

திண்டுக்கல் குடைபாறைபட்டியில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்திய இந்து முன்னணியினர் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல், 

தமிழகத்தில் கொரோனா பரவல் குறையாததால், விநாயகர் சதுர்த்தி விழாவை வீடுகளில் கொண்டாடும்படி அரசு உத்தரவிட்டது. மேலும் பொதுஇடங்களில் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்தது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் இந்து அமைப்பினரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பொதுஇடத்தில் சிலை வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.

மேலும் அதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல் குடை பாறைபட்டியில் ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்படும் விநாயகர் சிலை ஊர்வலம் பரபரப்பாக இருக்கும். இதேபோல் கடந்த சில ஆண்டுகளாக இந்து முன்னணியினர் சிலை வைப்பதும், அதை போலீசார் பறிமுதல் செய்வதும் நடைபெறுகிறது. அரசின் தடை உத்தரவால் பொதுமக்கள் சிலை வைக்கவில்லை.

தடையை மீறி சிலை

இந்த நிலையில் குடைபாறைபட்டியில் தடையை மீறி பொதுஇடத்தில் இந்து முன்னணியினர், விநாயகர் சிலை வைக்க போவதாக தகவல் பரவியது. இதையடுத்து 3 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்கிடையே இந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் சங்கர்கணேஷ், மாவட்ட செயலாளர்கள் சஞ்சீவிராஜ், வீரதிருமூர்த்தி, நகர தலைவர் ஞானசுந்தரம் உள்ளிட்டோர் கோஷமிட்டபடி, ஒரு தெருவழியாக விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் தடை இருப்பதால் பொதுஇடத்தில் சிலை வைக்க அனுமதி இல்லை என்று போலீசாரும், வருவாய்த்துறையினரும் தெரிவித்தனர். ஆனால், தடையை மீறி இந்து முன்னணியினர் சிலை வைக்க முயன்றனர். அதையடுத்து இந்து முன்னணியை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

அதன்பின்னர் சிலையை பறிமுதல் செய்வது போலீசாரா? அல்லது வருவாய்த்துறையினரா? என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனால் 15 நிமிடங்களுக்கு மேலாக விநாயகர் சிலை அங்கேயே இருந்தது. இதைத்தொடர்ந்து விநாயகர் சிலையை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து, சரக்கு வேனில் ஏற்றி சென்றனர். பின்னர் அந்த சிலையை கோட்டைக்குளத்தில் கரைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வேடசந்தூர்

இதேபோல் இந்து முன்னணி மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில், வேடசந்தூர் ஆசாரி தெருவில் தடையை மீறி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அந்த சிலையை, நகர்ப்பகுதிக்குள் கொண்டு செல்லாமல் அடைக்கனூரில் உள்ள குடகனாற்றில் கரைக்க போலீசார் அறிவுறுத்தினர்.

ஆனால் தாங்கள் திட்டமிட்டபடி, வேடசந்தூர் நகருக்குள் ஊர்வலமாக கொண்டு சென்று குங்கும காளியம்மன் கோவில் அருகே குடகனாற்றில் கரைப்போம் என்று இந்து முன்னணியினர் தெரிவித்தனர். இதற்கு போலீசார் போலீசார் ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கிடையே இந்து முன்னணியினர் போராட்டம் நடத்த தயார் ஆனார்கள். இதனையடுத்து மாலையில், அந்த சிலையை இந்து முன்னணியினர் கடைவீதி வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று குங்குமகாளியம்மன் கோவில் அருகே குடகனாற்றில் கரைத்தனர்.

Next Story