பிணமாக மீட்கப்பட்ட வீட்டுக்கு அழைத்து சென்று சுஷாந்த் சிங்கின் நண்பர், வேலைக்காரர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை


பிணமாக மீட்கப்பட்ட வீட்டுக்கு அழைத்து சென்று சுஷாந்த் சிங்கின் நண்பர், வேலைக்காரர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 23 Aug 2020 11:38 PM GMT (Updated: 23 Aug 2020 11:38 PM GMT)

நடிகர் சுஷாந்த் சிங் பிணமாக மீட்கப்பட்ட வீட்டுக்கு அழைத்து சென்று அவரது நண்பர், வேலைக்காரர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று தீவிர விசாரணை நடத்தினர்.

மும்பை, 

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங்(வயது34) கடந்த ஜூன் 14-ந் தேதி அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். சுஷாந்த் சிங்கை அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தற்கொலைக்கு தூண்டியதாக தொடர்புபடுத்தப்பட்ட இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 20-ந் தேதி மும்பை வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி இருக்கும் சாந்தாகுருசில் உள்ள டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகைக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக சுஷாந்த் சிங்குடன் வீட்டில் தங்கியிருந்த அவரது நண்பர் சித்தார்த் பிதானி, சமையல்காரர் நீரஜ் சிங், வேலைக்காரர் தீபேஷ் சாவந்த் ஆகியோர் தனித்தனியாக வந்தனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

வீட்டுக்கு அழைத்து சென்றனர்

பின்னர் அதிகாரிகள் அவர்களை சுஷாந்த் சிங் பிணமாக மீட்கப்பட்ட பாந்திராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவில் உள்ள தடவியல் நிபுணர்களும் சென்று இருந்தனர்.

முன்னதாக நேற்று முன்தினமும் சி.பி.ஐ. அதிகாரிகள் சுஷாந்த் சிங் வீட்டில் சித்தார்த் பிதானி, சமையல்காரா் நீரஜ் சிங், வேலைக்காரர் தீபேஷ் சாவந்த் ஆகிய 3 பேரையும் அழைத்து சென்று இருந்தனர். சுஷாந்த் சிங் தூக்கில் பிணமாக மீட்கப்பட்ட போது நடந்த காட்சிகளை 3 பேரையும் நடிக்க சொல்லி தீவிர விசாரணை நடத்தினர்.

இதேபோல சுஷாந்த் சிங்கின் வீட்டை புகைப்படம், வீடியோ எடுத்தனர். மேலும் சி.பி.ஐ. அதிகாரிகள் வெவ்வேறு குழுக்களாக சுஷாந்த் சிங் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கூப்பர் ஆஸ்பத்திரியிலும், பாந்திரா போலீஸ் நிலைய போலீசாரிடமும் விசாரணை நடத்தினர்.

Next Story