கொரோனா பரவ காரணமானவர்கள் எனக்கூறி நடவடிக்கை: 29 வெளிநாட்டினர் மீதான வழக்கு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு


கொரோனா பரவ காரணமானவர்கள் எனக்கூறி நடவடிக்கை: 29 வெளிநாட்டினர் மீதான வழக்கு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 Aug 2020 5:13 AM IST (Updated: 24 Aug 2020 5:13 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்குபெற்ற 29 வெளிநாட்டினர் மீதான வழக்கை மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் கிளை அதிரடியாக ரத்து செய்தது.

மும்பை, 

கடந்த மார்ச் மாதத்தில் டெல்லி நிஜாமுதீனில் தப்லிக் ஜமாத் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் மூலம் நாட்டில் கொரோனா தொற்று பரவியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கிடையே மாநாட்டில் கலந்து கொண்டு மராட்டியம் வந்த 29 வெளிநாட்டினர் தொற்று நோய் பரவ காரணமாக இருந்ததாக கூறி அவர்கள் மீது மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

இந்தநிலையில் தங்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சம்பந்தப்பட்ட வெளிநாட்டினர் மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் கிளையில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி.வி. நலவாடே, செவ்லிகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது.

விசாரணை முடிவில், 29 வெளிநாட்டினர் மீது மராட்டிய போலீசார் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு அளித்தனர்.

மேலும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

பலிகடா

ஒரு பெருந்தொற்று அல்லது பேரிடர் நடக்கும் இந்த சூழலில் அரசியல் ரீதியாக இயங்கும் ஓர் அரசு, அதற்கான பலியாடுகளை தேட முயல்கிறது. இந்த வெளிநாட்டவர்கள் அத்தகைய பலியாடுகள் ஆக்கப்பட தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே சூழல்கள் காட்டுகின்றன.

அவர்களுக்கு வழங்கப்பட்ட விசாவில் அவர்கள் எங்கு செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. அவர்கள் நமது விருந்தினர்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்களிடம் நாம் சகிப்புத்தன்மையை காட்டி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர்களை சிறையில் தள்ளிவிட்டோம். இந்த வழக்கில் அரசின் அரசியல் அழுத்தத்திற்கு உட்பட்டு போலீசார் எந்திரத்தனமாக செயல்பட்டு உள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆர்.-ஐ. ரத்து செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story