தேனி மாவட்டத்தில், ஒரேநாளில் 265 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர் - மேலும் ஒரு முதியவர் சாவு
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 265 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தொற்று பாதிப்புக்கு மேலும் ஒரு முதியவர் இறந்துபோனார்.
தேனி,
தேனி மாவட்டத்தில் கொரோனாவால் தினசரி 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 275 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அவர்களில் 173 பேர் பலியாகினர். இந்தநிலையில், தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு, பெண் போலீஸ், தேனி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், போடி டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர், வீரபாண்டியில் உள்ள 2 தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் 28 தொழிலாளர்கள் ஆகியோர் உள்பட மேலும் 170 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 445 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 265 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 9 ஆயிரத்து 235 பேர் மீண்டுள்ளனர்.
இதற்கிடையே கொரோனா அறிகுறியுடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேனி அருகே உள்ள முத்துத்தேவன்பட்டியை சேர்ந்த 60 வயது முதியவர் கடந்த 21-ந்தேதி பரிசோதனை முடிவு வரும் முன்பே உயிரிழந்தார். அவருக்கான பரிசோதனை முடிவு நேற்று வெளிவந்ததில், கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. இதன்மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்தது. இதேபோல், கொரோனா அறிகுறியுடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட கோம்பையை சேர்ந்த 80 வயது முதியவர் பரிசோதனை முடிவு வரும் முன்பே நேற்று உயிரிழந்தார். பரிசோதனை முடிவு வந்த பிறகே, அவர் கொரோனாவுக்கு இறந்தாரா என்பது தெரியவரும்.
Related Tags :
Next Story