கொடைக்கானலில் கனமழை; ஆற்றை கடக்க முயன்ற தொழிலாளி சாவு
கொடைக்கானலில் கனமழை பெய்ததில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் நட்சத்திர ஏரியில் இருந்து வெள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் ஆற்றை கடந்து சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி பலியானார்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6.15 மணி அளவில் கனமழை பெய்ய தொடங்கியது. விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை நேற்று அதிகாலை 5.30 மணி வரை நீடித்தது. இதன் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி உள்பட நகரை ஒட்டியுள்ள பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
இதற்கிடையே கனமழையால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான சாலையில் செண்பகனூர் பகுதியில் சாலையோர தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. மேலும் நகரின் பல்வேறு இடங்களில் சிறிய அளவிலான மண்சரிவும் ஏற்பட்டது.
இந்த நிலையில் கொடைக்கானல் குறிஞ்சி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளியான மணி (வயது 60) என்பவர் நேற்று முன்தினம் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நட்சத்திர ஏரியில் இருந்து வெள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் ஆற்றை அவர் கடக்க முயன்றார்.
அப்போது அவர் எதிர்பாராதவிதமாக ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார். இதற்கிடையே நீண்ட நேரம் ஆகியும் மணி வீட்டுக்கு வராததால் அவரை உறவினர்கள் இரவு முழுவதும் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. நேற்று காலையில் அவருடைய உடைமைகள் ஆற்றங்கரையோரத்தில் இருந்ததை பார்த்த உறவினர்கள், ஆற்று நீரில் அவர் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தனர்.
உடனடியாக போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் அவர்கள் தகவல் கொடுத்தனர். அதையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றின் குறுக்காக கயிறுகட்டி சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 500 அடி தூரத்தில் இருந்த ஒரு பள்ளத்தில் பாறைகளுக்கு இடையே சிக்கி மணி இறந்து கிடப்பதை தீயணைப்பு துறையினர் பார்த்தனர்.
பின்னர் அவருடைய உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கி கட்டிட தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Related Tags :
Next Story