அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலை: கணவர்-மகன் உள்பட 6 பேர் கைது


அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலை: கணவர்-மகன் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 24 Aug 2020 5:58 AM IST (Updated: 24 Aug 2020 5:58 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலை வழக்கில் கணவர்-மகன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். சொத்து தகராறில் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு, 

பெங்களூரு பண்டேபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மங்கம்மனபாளையா பகுதியில் வசித்து வந்தவர் கீதா(வயது 45). இவர் எச்.எஸ்.ஆர்.லே-அவுட் பகுதியில் சொந்தமாக அழகு நிலையம் நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி இரவு கீதா வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். இந்த நிலையில் 18-ந் தேதி அதிகாலை கீதாவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனால் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சங்கரப்பா என்பவர் கீதாவின் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது ரத்த வெள்ளத்தில் கீதா இறந்து கிடந்தார்.

இதுபற்றி அறிந்த பண்டேபாளையா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கீதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

கணவர்-மகன் கைது

அப்போது கீதா தனது கணவர், மகனை பிரிந்து தனியாக வசித்து வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் கீதா கொலை தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். அப்போது கீதாவுக்கும், அவரது மகன் வருணுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததும், இதனால் கீதாவிடம், வருண் அடிக்கடி தகராறு செய்து வந்ததும் தெரியவந்தது. இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது வருண் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது சொத்து தகராறில் கீதாவை, வருணும், அவரது தந்தை அஞ்சனியும் கூலிப்படையை ஏவி கொன்றது தெரியவந்தது. மேலும் வருண் கொடுத்த தகவலின்பேரில் அஞ்சனி, கூலிப்படையை சேர்ந்த நவீன்(34), நாகராஜ்(22), பிரதீப்(22), இன்னொரு நாகராஜ்(21) ஆகியோரை பண்டேபாளையா போலீசார் கைது செய்தனர். கைதான வருணிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

சொத்து கொடுக்க...

அதாவது, கணவர், மகனை பிரிந்து தனியாக வசித்து வந்த கீதாவுக்கு ஏராளமான சொத்துகள் இருந்து உள்ளது. இதனால் சொத்தில் தனக்கும் பங்கு தர வேண்டும் என்று வருண், கீதாவிடம் கேட்டு வந்து உள்ளார். ஆனால் கீதா, வருணுக்கு சொத்து கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த வருண், கீதாவை கொலை செய்ய முடிவு செய்தார். இதுகுறித்து வருண் தனது தந்தை அஞ்சனியிடம் கூறினார்.

அவரும் கீதா தன்னை பிரிந்து சென்ற ஆத்திரத்தில் இருந்ததால் கீதாவை கொலை செய்ய ஒப்புக்கொண்டார். பின்னர் வருணும், அஞ்சனியும் கூலிப்படையை சேர்ந்தவர்களிடம் பேரம் பேசி கீதாவை தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

Next Story