முன்கள பணியாளர்களை அச்சுறுத்தும் தொற்று: குமரியில் 4 டாக்டர்களுக்கு கொரோனா - வன அதிகாரியும் பாதிக்கப்பட்டார்
குமரி மாவட்ட வனத்துறை அதிகாரி மற்றும் 4 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதிலும் முன்களப்பணியாளர்கள், அரசுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனாவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் நேற்று முன்தினம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள நகர்நல மையத்தில் கொரோனா பரிசோதனை செய்தார். இதற்கான பரிசோதனை முடிவு நேற்று வெளியானது.
இதில் வனத்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வனத்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று இருப்பதையொட்டி அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணியாற்றிய அலுவலக பணியாளர்கள், வனத்துறை அதிகாரிகள், கார் டிரைவர் உள்ளிட்டோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மேலும் வடசேரியில் உள்ள மாவட்ட வனத்துறை அதிகாரியின் அறை முழுவதும் கிருமி நாசினி தெளித்து, மூடப்பட்டது. அலுவலகம் அருகில் உள்ள அவருடைய வீட்டிலும் கிருமி நாசினி தெளித்து, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 2 டாக்டர்கள் மற்றும் 2 பயிற்சி டாக்டர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த 4 பேரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஏற்கனவே ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியின் 5-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story