சுகாதார அதிகாரி தற்கொலை: மைசூரு மாவட்ட பஞ்சாயத்து சி.இ.ஓ. மீது வழக்குப்பதிவு
சுகாதாரத்துறை அதிகாரி தற்கொலை தொடர்பாக மைசூரு மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி (சி.இ.ஓ.) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் பணிஇடமாற்றமும் செய்யப்பட்டார்.
மைசூரு,
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் நாகேந்திரா (வயது 43). டாக்டரான இவர், கொரோனா தடுப்பு பணியிலும் ஈடுபட்டு வந்தார். இவர் மைசூரு ஆலனஹள்ளியில் தனியாக வசித்து வந்தார். அவருடைய குடும்பத்தினர் வேறொரு பகுதியில் வசித்து வந்தனர். நாகேந்திரா கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்ததால் பாதுகாப்பு கருதி தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 20-ந்தேதி ஆலனஹள்ளியில் உள்ள தனது வீட்டில் நாகேந்திரா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மைசூரு மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக இருந்த பிரசாந்த் குமார் மிஸ்ரா கொடுத்த தொல்லை காரணமாக தான் நாகேந்திரா தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
போராட்டம்
இதன்காரணமாக கர்நாடக மாநிலம் முழுவதும் டாக்டர்கள், செவிலியர்கள் தங்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் சமயத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் குதித்தது அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நாகேந்திராவின் உடலை மருத்துவமனை முன்பு வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் மருத்துவ கல்வித்துறை மந்திரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டார். ஆனாலும் உறவினர்களும், டாக்டர்களும் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.
இதுதொடர்பாக மந்திரி சுதாகர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் கொரோனா பரவல் நேரத்தில் டாக்டர்கள் போராடுவது சரியல்ல. நோயாளிகள் மிகவும் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் கடவுள்களாக பார்க்கப்படுகிறார்கள். இதனால் நீங்கள் (டாக்டர்கள்) போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
சி.இ.ஓ. மீது வழக்குப்பதிவு
இந்த நிலையில், சுகாதாரத்துறை அதிகாரி நாகேந்திராவின் தந்தை ராமகிருஷ்ணா, இந்த தற்கொலை தொடர்பாக, மைசூரு மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பிரசாந்த் குமார் மிஸ்ரா மீது ஆலனஹள்ளி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், என்னுடைய மகனின் தற்கொலைக்கு பிரசாந்த் குமார் மிஸ்ரா தான் காரணம். எனது மகன் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து விடுமுறை எதுவும் எடுக்காமல் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தான். ஆனால் அவனை குறிவைத்து பிரசாந்த் குமார் மிஸ்ரா தொந்தரவு கொடுத்துள்ளார். எனது மகன் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும், அவன் சரியாக பணியாற்றவில்லை என்றும், தேசிய பேரிடர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுவதாகவும் பிரசாந்த் குமார் மிஸ்ரா மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் தான் மனமுடைந்து என்னுடைய மகன் தற்கொலை செய்துகொண்டார். அவனை தற்கொலைக்கு தூண்டியதாக பிரசாந்த் குமார் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில் ஆலனஹள்ளி போலீசார் பிரசாந்த் குமார் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பணி இடமாற்றம்
இந்த நிலையில், மைசூரு மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பிரசாந்த் குமார் மிஸ்ரா மீதான எதிர்ப்புகள் வலுத்து வந்தன. அவருக்கு எதிராக கடந்த 4 நாட்களாக டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், மைசூரு மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக இருந்த பிரசாந்த் குமார் மிஸ்ராவை உடனடியாக பணி இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மைசூரு மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பொறுப்பை கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் கூடுதலாக கவனித்து வருகிறார்.
இதற்கிடையே, இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் ராஜன் சர்மா மற்றும் பொதுச்செயலாளர் டாக்டர் ஆர்.வி.அசோகன் ஆகியோர் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், ‘இந்த சம்பவத்தால் கர்நாடகத்தில் உள்ள டாக்டர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில், சுகாதாரத்துறை அதிகாரி தற்கொலை குறித்து விரிவான விசாரணைக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணையை 7 நாட்களுக்குள் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story