கொரோனா, வெள்ள பாதிப்புக்கு மத்தியில் கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி எளிமையாக கொண்டாடப்பட்டது


கொரோனா, வெள்ள பாதிப்புக்கு மத்தியில் கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி எளிமையாக கொண்டாடப்பட்டது
x
தினத்தந்தி 24 Aug 2020 12:44 AM GMT (Updated: 24 Aug 2020 12:44 AM GMT)

கொரோனா, வெள்ள பாதிப்புக்கு மத்தியில் கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி எளிமையாக கொண்டாடப்பட்டது. சிலைகள் விற்பனை, வியாபாரம் மந்தத்தால் ரூ.400 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு, நாள் அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது. மேலும் வடகர்நாடகத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக, அந்த மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வடகர்நாடகம் உள்பட 11 மாவட்டங்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், நேற்று முன்தினம் கர்நாடகத்தில் சில கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அரசு அனுமதி அளித்தது. குறிப்பாக பொது இடங்களில் 4 அடி உயர சிலை மட்டுமே வைத்து வழிபட அரசு அனுமதி அளித்தது. மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் வார்டுக்கு ஒரு விநாயகர் சிலை வீதம் 198 வார்டுகளுக்கும், 198 சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவும், தண்ணீர் தொட்டிகளில் கரைக்கவும் மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்தது.

அரசின் உத்தரவுப்படியும், சில கட்டுப்பாடுகள் காரணமாகவும், கொரோனா மற்றும் வெள்ள பாதிப்புக்கு மத்தியிலும் கர்நாடகத்தில் நேற்று முன்தினம் மிகவும் எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இதற்கு முன்பு விநாயகர் சதுர்த்தி தினத்தில் கோவில்களில் ஆயிரக்கணக்கானோர் சென்று வழிபடுவதுடன், பூஜை செய்வதும் வழக்கம். கொரோனா பாதிப்பு காரணமாக கோவில்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. 200 முதல் 300 பேர் வரை மட்டுமே ஒரு கோவில்களுக்கு பக்தர்கள் சென்று வழிபட்டனர்.

ரூ.400 கோடி இழப்பு

பெங்களூரு உள்பட மாநிலத்தில் விநாயகர் சிலைகள் விற்பனையும் மந்தமாகவே நடைபெற்றிருந்தது. ஏனெனில் வீடுகளில் 2 அடியும், பொது இடங்களில் 4 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வைத்து வழிபட அரசு அனுமதி வழங்கி இருந்தது. இதன் காரணமாக பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் எதுவும் விற்பனை ஆகவில்லை. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்பிலான விநாயகர் சிலைகள் விற்பனை ஆகாமல் இருந்தது. இதன் காரணமாக வியாபாரிகள் பெருமளவு நஷ்டம் அடைந்துள்ளனர்.

அத்துடன் பூ, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட வியாபாரமும் மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம் என்றும், இந்த ஆண்டு கொரோனா மற்றும் மழை, வெள்ள பாதிப்பு காரணமாக விநாயகர் சதுர்த்தி விற்பனை மந்தமாக இருந்ததாகவும், இதன் காரணமாக ரூ.400 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் வியாபாரிகள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story