நடுக்கடலில் ஓட்டை விழுந்த விசைப்படகு கரை ஒதுங்கியது
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஓட்டை விழுந்த விசைப்படகு புதுக்குப்பம் கடற்கரையில் ஒதுங்கியது
பாகூர்,
வீராம்பட்டினம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கலைவாணி (வயது 45). இவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் அவரது கணவர் நடராஜன், முருகன், அஞ்சாபுலி, சிலம்பரசன் ஆகிய 4 பேர் நேற்று முன்தினம் மாலை தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்றனர். துறைமுக முகத்துவாரம் பகுதியில் சென்றபோது படகு தரைதட்டியதாக தெரிகிறது. இதனை சமாளித்து கொண்டு மீன் பிடிப்பதற்காக தெற்கு நோக்கி அவர்கள் சென்றனர்.
கடலூர் தேவனாம்பட்டினம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென படகில் ஓட்டைவிழுந்து தண்ணீர் உள்ளே புகுந்தது. இதை பார்த்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தண்ணீரை வெளியேற்றி, ஓட்டையை அடைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதிகளவில் தண்ணீர் புகுந்தது.
தரை தட்டி நின்றது
இதையடுத்து படகை கரைக்கு திருப்ப மீனவர்கள் முடிவு செய்தனர். அதன்படி படகை முகத்துவார பகுதியை நோக்கி வேகவேகமாக செலுத்தினர். ஒரு கட்டத்தில் தண்ணீர் அதிகளவில் உள்ளே புகுந்ததால், என்ஜின் கட்டுப்பாட்டை இழந்து, கரையை நோக்கி ஒதுங்கியது. நேற்று அதிகாலை 1 மணியளவில் பூரணாங்குப்பம் அடுத்த புதுகுப்பம் பகுதியில் படகு கரை ஒதுங்கியது. அதில் இருந்த மீனவர்கள் 4 பேர் எவ்வித காயமும் இன்றி கரைக்கு வந்தனர்.
இதுகுறித்து தவளக்குப்பம் போலீஸ் நிலையம், கடலோர காவல் நிலையம் மற்றும் புதுச்சேரி மீன்வளத்துறை உள்ளிட்ட அலுவலகங்களுக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். தரை தட்டி நிற்கும் படகைமீட்க மீனவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story