தளர்வு இல்லா முழு ஊரடங்கு சென்னையில், வாகன நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின
தளர்வு இல்லா முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் வாகன நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.
சென்னை,
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. சென்னையில் தளர்வு இல்லா முழு ஊரடங்கு 10-வது முறையாக நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.
கடைகள் அடைப்பு
தளர்வு இல்லா முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் நேற்று ஓட்டல்கள், கடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் என அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. சாலையோரம் ஒரு கடைகள் கூட தென்படவில்லை. சென்னை முழுவதும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன.
தியாகராயநகர், பாண்டிபஜார், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், அண்ணாநகர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், பூக்கடை பாரிமுனை உள்ளிட்ட கடைவீதிகள் நிறைந்த பகுதிகள் அனைத்தும் நேற்று முழுமையாக வெறிச்சோடி காணப்பட்டன. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் காணப்படும் தியாகராயநகர் ரங்கநாதன் தெரு நேற்று ஆரவாரமின்றி அமைதியாக காட்சி தந்தது.
சாலைகள் வெறிச்சோடின
சென்னையில் உள்ள அனைத்து சாலைகளும் வாகன நடமாட்டமின்றி பாலைவனம் போல காட்சியளித்தது. மெரினா காமராஜர் சாலை, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை, சேப்பாக்கம் வாலாஜா சாலை, பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலை, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜாஜி சாலை, கிண்டி சர்தார் படேல் சாலை, சென்டிரல் வால்டாக்ஸ் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன. இணைப்பு சாலைகளும் மூடப்பட்டன.
சாலைகளில் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவைகள் இன்றியும், உரிய ஆவணங்கள் இன்றியும் வந்த வாகன ஓட்டிகளை போலீசார் வழிமறித்து அபராதம் விதித்தனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரோந்து சென்றபோது, சாலைகளில் தேவையில்லாமல் கூட்டம், கூட்டமாக நின்றவர்களை கலைந்துசெல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.
Related Tags :
Next Story