ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் பீலா ராஜேஷின் தந்தை ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. எல்.என்.வெங்கடேசன் மரணம்


ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் பீலா ராஜேஷின் தந்தை ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. எல்.என்.வெங்கடேசன் மரணம்
x
தினத்தந்தி 24 Aug 2020 2:27 AM GMT (Updated: 24 Aug 2020 2:27 AM GMT)

ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் பீலா ராஜேஷின் தந்தையும், ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி.யுமான எல்.என்.வெங்கடேசன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81.

சென்னை, 

தமிழக போலீஸ் துறையில் 1962-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியானவர் எல்.என்.வெங்கடேசன். பல்வேறு பதவிகளில் மிக திறம்பட பணியாற்றிய அவர், டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு அடைந்து ஓய்வுபெற்றார்.

தீயணைப்பு படையின் இயக்குனராக அவர் இருந்தபோது பல மாற்றங்களை கொண்டுவந்தார். சில ஆண்டுகள் சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. யிலும் பணியாற்றி சில முக்கிய வழக்குகளை கையாண்டார். ஓய்வுபெற்றபிறகு சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் வசித்துவந்தார்.

சிறிதுகாலம் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், நேற்று மரணம் அடைந்தார். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகில் உள்ள வாழையடி இவருடைய சொந்த ஊர் ஆகும். எல்.என்.வெங்கடேசனின் மனைவி ராணி வெங்கடேசன், சாத்தான்குளம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆக பணியாற்றியவர்.

இறுதிச்சடங்கு

எல்.என்.வெங்கடேசனுக்கு துபாயில் இருக்கும் பீனா மணிவண்ணன் என்ற மகளும், தமிழக வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை செயலாளராக இருக்கும் டாக்டர் பீலா ராஜேஷ் என்ற மகளும், அமெரிக்காவில் வசிக்கும் என்ஜினீயர் கார்த்திக் வெங்கடேசன் என்ற மகனும் இருக்கிறார்கள். எல்.என்.வெங்கடேசன் உடல் கொட்டிவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.

எல்.என்.வெங்கடேசனின் உடல் நாளை மறுநாள்(புதன்கிழமை) மாலை 4 மணிக்கு பெசன்ட்நகர் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

கொட்டிவாக்கத்தில் வைக்கப்பட்டு இருக்கும் எல்.என்.வெங்கடேசனின் உடலுக்கு நெல்லை நாடார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் டி.ராஜ்குமார், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

எல்.என்.வெங்கடேசன் மறைவுக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story