டாக்டர் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழப்பு பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு கோர்ட்டு உத்தரவு


டாக்டர் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழப்பு பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 Aug 2020 5:13 AM IST (Updated: 25 Aug 2020 5:13 AM IST)
t-max-icont-min-icon

டாக்டரின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு டாக்டர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க மாநில நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மும்பை, 

மும்பையை சேர்ந்தவர் லியோ. இவரது மனைவி நான்சி. இவர்களது மகன் இஷிஷ்(வயது2). கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் 9-ந்தேதி சிறுவன் இஷிசுக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பெற்றோர் மகனை சவுபாத்தியில் உள்ள கிளினிக்கிற்கு அழைத்து சென்றனர். ஆனால் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து பைகுல்லாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். அங்கு டாக்டர் சைரஸ் என்பவர் சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

10 நாளாக அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவனின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் இஷிஷ் உயிரிழந்தான்.

ரூ.12 லட்சம் இழப்பீடு

இதனால் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் டாக்டர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் தங்களது மகன் உயிரிழந்ததாகவும், இதற்காக இழப்பீடு கேட்டு கடந்த 2011-ம் ஆண்டு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோருக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்கும்படி மருத்துவமனை நிர்வாகம் மற்றும் டாக்டருக்கு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாநில நுகர்வோர் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், மருத்துவமனையில் சிறுவனுக்கு அளித்த சிகிச்சை உயர்தரமாக இல்லை எனவும், டாக்டரின் அலட்சியம் காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு அளித்த தீர்ப்பு செல்லுபடியாகும் என மாநில நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது.

Next Story