திருவேற்காட்டில் அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்


திருவேற்காட்டில் அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்
x
தினத்தந்தி 25 Aug 2020 7:14 AM IST (Updated: 25 Aug 2020 7:14 AM IST)
t-max-icont-min-icon

திருவேற்காட்டில் அமைச்சர் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர், அமைச்சர் சென்ற பிறகு கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி, 

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட நூம்பல் பகுதியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வடமாநிலம் சென்ற தொழிலாளர்கள், தமிழகம் தங்களின் தாயகம் என மீண்டும் வரத்தொடங்கி உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் கொரோனா தாக்கம் குறைந்து உள்ளதுதான். இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவது தொடர்பாக முதல்-அமைச்சர் நல்ல முடிவை எடுப்பார்.

கொரோனா காலத்தில் இந்தியாவிலேயே அதிகம் பேரை வேலைக்கு அனுப்பி வைத்ததும், அதிக முதலீடுகளை ஈர்த்ததும் தமிழகம்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அம்பத்தூர் எம்.எல்.ஏ. அலெக்சாண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாக்குவாதம்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாகவும், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அ.தி.மு.க.வினர் இடையே உட்கட்சி பூசல் காரணமாக மோதல் ஏற்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அமைச்சர் பாண்டியராஜன் முன்னிலையிலேயே அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை அமைச்சர் சமாதானம் செய்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் பாண்டியராஜன் அங்கிருந்து புறப்பட்டு சென்றபிறகு அ.தி.மு.க.வினர் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story