கொரோனா அதிகம் பரவ காரணம் என்ன? மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை


கொரோனா அதிகம் பரவ காரணம் என்ன? மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
x
தினத்தந்தி 25 Aug 2020 7:14 AM IST (Updated: 25 Aug 2020 7:14 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா பரிசோதனையை அதிகரிக்க உத்தரவிட்டார்.

சென்னை, 

தமிழகத்தில் கடந்த 17-ந் தேதியில் இருந்து ‘இ-பாஸ்’ நடைமுறையில் தளர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்துக்குள் போக்குவரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் கே.சண்முகம் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கொரோனா தொற்றின் நிலை பற்றி அவர் கேட்டறிந்தார்.

பாதிப்பு அதிகமாக இருந்தால், அதற்கான காரணம் என்ன? அதை தவிர்க்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன? என்பதை இடையிடையே கேள்விகள் எழுப்பி கேட்டறிந்தார். குறிப்பாக தொற்று அதிகம் உள்ள கோவை, கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களின் நிலை பற்றி விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மாலை 6 மணி வரை நீடித்தது.

அறிவுரைகள்

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் கே.சண்முகம் வழங்கிய அறிவுரைகள் வருமாறு:-

தமிழகத்தில் கொரோனா தொற்று நீடிக்கிறது. இ-பாஸ் வழங்கும் நடைமுறையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து அதிகரித்து தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஒவ்வொரு கலெக்டரும் தங்கள் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை நடைமுறைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதன் மூலம் மாவட்டங்களில் கொரோனாவால் ஏற்படும் மரணங்களை குறைக்க முடியும்.

காய்ச்சல் முகாம்கள்

காய்ச்சல் முகாம்கள் அதிகரிக்கப்பட வேண்டும். கொரோனா தொற்று ஏற்பட்டு அதன் தாக்கம் முற்றிய நிலையில் தான் பலர் மருத்துவமனைகளை நாடுகின்றனர். எனவே மருந்து இல்லாத இந்த நோய்க்கான சிகிச்சை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருக்கும்போதே கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சமூக இடைவெளி, முககவசம், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை மக்களிடம் நன்றாக விளம்பரப்படுத்த வேண்டும்.

தயார் நடவடிக்கை

‘இ-பாஸ்’ தளர்வுக்கு பிறகு கொரோனா பரிசோதனையை அதிகரிக்க, தொற்றுள்ளோரின் எண்ணிக்கையும் உயரும். எனவே அவர்களின் சிகிச்சைக்கு தேவையான அளவில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் போன்றவை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story