ஊரடங்கால் போதிய வருமானமின்றி கடன் தொல்லை: கடைக்குள் தையல்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
மாங்காடு அருகே ஊரடங்கால் போதிய வருமானமின்றி கடன் தொல்லைக்குள்ளான தையல்காரர், கடைக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி,
மாங்காடு அடுத்த சிக்கராயபுரம், தங்கம் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 44). இவர் அதே பகுதியில் தையல் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மாலதி (35). நேற்று முன்தினம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற ராமானுஜம், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி மாலதி, கடைக்கு சென்று பார்த்தபோது உள்பக்கமாக சாத்தப்பட்டு இருந்தது.
முழு ஊரடங்கு என்பதால் கடையை உள்பக்கமாக சாத்திவிட்டு வேலை செய்கிறார் என நினைத்த மனைவி, கடையின் கதவை திறந்து பார்த்தார். அப்போது ராமானுஜம், கடைக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடன் தொல்லை
இதுகுறித்து தகவலறிந்து வந்த மாங்காடு போலீசார், ராமானுஜம் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ஊரடங்கு காலத்தில் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வந்த ராமானுஜம், அதனால் ஏற்பட்ட கடன் தொல்லையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரியவந்தது.
இதன் காரணமாக துணி தைக்க செல்வதாக கூறி வீட்டில் இருந்து கடைக்கு வந்த அவர், கடைக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
இது குறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story