குடிபோதையில் விபரீதம் நண்பர் என நினைத்து முதியவர் அடித்து கொலை வாலிபர் கைது
காஞ்சீபுரம் அருகே குடிபோதையில் நண்பர் என நினைத்து ஆள்மாறி இரும்பு கம்பியால் அடித்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அருகே விப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் (வயது 30). இவரது நண்பர் ஜெகன் (30). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்த போது கணேஷ், ஜெகன் இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேஷ், ஜெகனை சராமாரியாக தாக்கியதில் அவர் தப்பி ஓடிவிட்டார்.
இந்த நிலையில், வழக்கமாக தான் படுத்து உறங்கும் ரேஷன் கடை அருகே படுக்காமல் ஜெகன், அங்குள்ள தேவாலயத்தில் படுத்துள்ளார். அப்போது ரேஷன் கடைக்கு குடிபோதையில் வந்த கணேஷ், துணி போர்த்தியபடி தூங்கி கொண்டிருந்த முதியவர் ஒருவரை ஜெகன் என நினைத்து இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்தார்.
வாலிபர் கைது
இதையடுத்து தான் தாக்கியது அதே ஊரை சேர்ந்த எட்டியப்பன் (70) என்பதை அறிந்த அவர், தப்பி ஓடி விட்டார். ஆனால் தாக்கப்பட்ட முதியவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் ஆகியோர் விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கு காரணமான தலைமறைவாக இருந்த கணேசை போலீசார் கைது செய்து, காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காஞ்சீபுரம் கிளைச்சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story