ஓட்டப்பிடாரம் அருகே மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25 லட்சம் கடன் உதவி அமைச்சர் வழங்கினார்
ஓட்டப்பிடாரம் அருகே மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25 லட்சம் கடன் உதவியை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அக்கநாயக்கன்பட்டியில் மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா மற்றும் மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கூடுதல் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டியும், 6 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25 லட்சம் கடன் உதவியும், 76 விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினார்.
வாழ்க்கைத்தரம்
அப்போது அவர் பேசுகையில், “ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கினார். தமிழகம் முழுவதும் சுய உதவி குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு பொருடுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் மூலம் கடன் உதவிகள் வழங்கி வருகிறோம்“ என்றார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் மாவட்ட கூட்டுறவு துணைப்பதிவாளர் ஜெயசீலன், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, ஓட்டப்பிடாரம் தாசில்தார் ரகு, யூனியன் துணை தலைவர் லட்சுமணபெருமாள், மாவட்ட கவுன்சிலர் தேவராஜ், ஒன்றிய கவுன்சிலர் வீரபாண்டி அழகிரி என்ற கோபி, கீழமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் கண்ணன், வடக்கு மாவட்ட வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் பரமசிவன், கயத்தார் கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, யூனியன் ஆணையாளர்கள் ஹெலன் பொன்மணி, வளர்மதி, மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் பொன்னுச்சாமி, ஒன்றிய தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜேஷ்குமார், மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணை தலைவர் கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் தம்பிராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story