புதுக்கோட்டை அருகே, அரசு பெண் அதிகாரி வீட்டில் 50 பவுன் நகைகள் மாயம்? அடுத்தடுத்த வீடுகளிலும் மர்ம நபர்கள் கைவரிசை


புதுக்கோட்டை அருகே, அரசு பெண் அதிகாரி வீட்டில் 50 பவுன் நகைகள் மாயம்? அடுத்தடுத்த வீடுகளிலும் மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 25 Aug 2020 3:30 AM IST (Updated: 25 Aug 2020 8:54 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே ஓய்வுபெற்ற அரசு பெண் அதிகாரி வீட்டில் 50 பவுன் நகை மாயமானது. மேலும் அடுத்தடுத்த வீடுகளிலும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை கட்டியவயல் அருகே பாரதிநகரை சேர்ந்தவர் முத்து (வயது 45). இவர் கடந்த 20-ந் தேதி தனது தம்பியின் மகள் நிச்சயதார்த்த விழாவிற்கு சென்று விட்டு மறுநாள் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள், பொருட்கள் வெளியே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த நகைகளும் திருடப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக முத்து திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதில் முத்து வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு போனதாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் அவரது வீட்டின் அருகே மற்றொரு வீட்டிலும் திருட்டு முயற்சி நடந்திருந்தது. அதில் நகை, பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை.

இந்த சம்பவங்களுக்கிடையே புதுக்கோட்டை அபிராமி நகர் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு பெண் அதிகாரி ஒருவரது வீட்டில் 50 பவுன் நகைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த பெண் அதிகாரி திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கணவர் இறந்த பிறகு தனிமையில் வசித்து வரும் அந்த பெண் அதிகாரியின் வீட்டிற்கு உறவினர்கள் அவ்வப்போது சென்று வந்துள்ளனர். பீரோவில் லாக்கர் மற்றும் ஆங்காங்கே வைத்திருந்த நகைகள் மாயமானதாக தெரிவித்தார். அந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த உறவினர்கள் தான் கைவரிசையை காட்டியிருக்கலாம் என தெரிகிறது. அவர்களும் தாங்களாகவே பேசி முடிவெடுத்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். நகைகள் மாயமானது தொடர்பாக அவர்கள் இதுவரைக்கும் புகார் அளிக்க போலீஸ் நிலையத்திற்கு வரவில்லை”என்றனர்.

Next Story