வீட்டின் கதவை திறந்து 11 பவுன் நகை- பணம் திருட்டு - உரிமையாளர் போல நுழைந்த மர்ம நபருக்கு வலைவீச்சு
தரங்கம்பாடி அருகே வீட்டின் கதவை திறந்து உரிமையாளர் போல நுழைந்து 11 பவுன் நகை- பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவெண்காடு,
மயிலாடுதுறை அருகே உள்ள தரங்கம்பாடி தாலுகா பரசலூர் ஊராட்சி ராஜராஜன் தெருவை சேர்ந்தவர் கலியவரதராஜன்(வயது65). இவருடைய மனைவி பானுமதி. நேற்றுமுன்தினம் இரவு கலியவரதராஜன் தனது மனைவி பானுமதியுடன் வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள ஊரில் நடைபெற்ற உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது அவர் வீட்டின் சாவியை கதவின் அருகிலேயே வைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த கவனித்துக்கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் கலியவரதராஜன் குடும்பத்துடன் வெளியே சென்றதை உறுதி செய்த பின் கதவின் அருகே இருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே நுழைந்தார். பின்னர் அவர் வீட்டில் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து உள்ளே இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்று விட்டார்.
நேற்று காலை தனது வீட்டுக்கு வந்த கலியவரதராஜன் வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டுப்போய் இருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டின் கதவு அருகே சாவியை வைத்து சென்றதால் மர்ம நபர் மிக எளிதாக கதவை திறந்து நகை- பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. வீட்டின் கதவை திறந்து உரிமையாளர் போல உள்ளே நுழைந்த மர்ம நபர், நகை- பணத்தை திருடி சென்ற சம்பவம் பரசலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story