கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதற்கு ஆயில் நிறுவனங்கள் வழங்கும் முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும்


கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதற்கு ஆயில் நிறுவனங்கள் வழங்கும் முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 25 Aug 2020 11:14 AM IST (Updated: 25 Aug 2020 11:14 AM IST)
t-max-icont-min-icon

கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதற்கு ஆயில் நிறுவனங்கள் வழங்கும் முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம், தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். கொரோனா ஊரடங்கால் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் மனு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. அந்த பெட்டியில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை போட்டு விட்டு செல்கிறார்கள்.

தமிழ்நாடு எல்.பி.ஜி. கியாஸ் சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்க நெல்லை மாவட்ட தலைவர் பாலு தலைமையில் செயலாளர் ராஜகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரளாக வந்தனர். அவர்கள் மினி லாரியில் கியாஸ் சிலிண்டருடன் வந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் நிர்வாகிகள் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு வினியோகஸ்தர்கள் மாத சம்பளம் தருவது இல்லை. நாங்கள் வாடிக்கையாளர்களை நம்பி தான் வாழ்ந்து வருகிறோம்.

முழு ஊதியம்

ஐ.ஓ.எல்., எச்.பி.சி., பி.பி.சி., கியாஸ் ஏஜென்சிகள் வாடிக்கையாளர்களிடம் பெறும் இனாம் தொகையின் பாதியை ஏஜென்சியை பெற்று கொள்கின்றன. பெரிய நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு கமிஷன் தொகை ஒதுக்கியுள்ளது. அந்த தொகையை ஏஜென்சி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு கொடுப்பது இல்லை. இதுபோன்ற பல்வேறு இன்னல்களை கியாஸ் டெலிவரி செய்யும் தொழிலாளர்கள் அனுபவித்து வருகிறார்கள்.

நெல்லை மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். டெலிவரி செய்வதற்கு ஆயில் நிறுவனங்கள் வழங்கும் முழு ஊதியத்தையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். கியாஸ் டெலிவரி செய்ய வாகன வசதியையும் செய்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தாயை மீட்க வேண்டும்

பாளையங்கோட்டையை அடுத்த மேலகருங்குளத்தை சேர்ந்த பேச்சிமுத்து (வயது 17) என்ற சிறுவன் தனது பாட்டி பேச்சியம்மாளுடன் வந்து இருந்தான். அவன், கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தான். அதில், எனது தாய் ராமலட்சுமி புனேவில் உள்ள ஒரு மாவு அரைக்கும் நிறுவனத்தில் கடந்த 9 மாதமாக வேலை செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் அவர் ஊருக்கு வர முயற்சி செய்கிறார். ஆனால் மாவு அரைக்கும் நிர்வாகம் சொந்த ஊருக்கு அனுப்ப மறுக்கிறது. எனது தாயை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

தமிழர் மீட்பு களம் ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமையில் கலெக்டரிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அதில், முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலக்கருங்குளம் செட்டிகுளத்தில் மண் அள்ளி வந்தவரை பற்றி அரசு அதிகாரிகளிடம் கூறினேன். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை அதிகாரியிடம் கூறினேன். அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக ஒரு கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் மண் அள்ளியவர் எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

பாளையங்கோட்டை மேலப்பாட்டத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் கொடுத்த மனுவில், எனது தம்பி பாளையங்கோட்டையை அடுத்த ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கிறார். அவருடைய அசல் கல்வி சான்றிதழ்களை வாங்கி வைத்து கொண்டு பணம் கேட்டு அந்த கல்வி நிறுவனம் மிரட்டுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story