பட்டுக்கோட்டையில் பரிதாபம்: மகள்-2 பேத்திகளுக்கு விஷம் கொடுத்து கொன்று பெண் தற்கொலை- காரணம் என்ன? போலீசார் விசாரணை
பட்டுக்கோட்டையில், மகள்-2 பேத்திகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பட்டுக்கோட்டை,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி சாந்தி(வயது 50). கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ராஜகோபால் இறந்து விட்டார். கணவர் இறந்த பின்னர் சாந்தி தனது மகள் துளசி(21) மற்றும் துளசியின் 4 வயது மற்றும் 2 வயதுள்ள பெண் குழந்தைகளுடன் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியை சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மாடிப்பகுதியில் வசித்து வந்தார்.
துளசியின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால் கணவரை விட்டு பிரிந்த துளசி, தனது குழந்தைகளுடன் தாயுடன் வசித்து வந்ததுடன், பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். சாந்தி 2 நாய்களை வளர்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சாந்தி வசித்து வந்த வீட்டில் இருந்து குழந்தைகள் அழும் சத்தம் கேட்டுள்ளது. சிறிது நேரத்தில் அழுகை சத்தம் நின்று விட்டது. இதேபோல் சாந்தி வளர்த்து வந்த 2 நாய்களும் குரைக்கும் சத்தம் வீட்டிற்குள் கேட்டுள்ளது. அந்த சத்தமும் சிறிது நேரத்தில் அடங்கி விட்டது.
இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தில் வசித்து வருபவர்கள் சந்தேகம் அடைந்து வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் சந்தானம் அங்கு விரைந்து வந்து வீட்டின் கதவை தட்டினார். நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அவர் வீட்டின் கதவை திறக்க முயன்றார். ஆனால் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.
இதனையடுத்து அவர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது உள்ளே கண்ட காட்சியை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சாந்தி சேலையில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். தரையில் அவரது மகள் துளசி மற்றும் 2 பெண் குழந்தைகளும், சாந்தி வளர்த்து வந்த 2 நாய்களும் இறந்து கிடந்தன.
இதுகுறித்து பட்டுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்திற்கு சகாதேவன் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். பின்னர் தூக்கில் தொங்கிய சாந்தியின் உடலை கீழே இறக்கினர்.
சாந்தி முதலில் தனது மகளுக்கும், பேரக்குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து உள்ளார். தொடர்ந்து தான் ஆசையாக வளர்த்த நாய்களுக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு தனது மகள் மற்றும் பேத்திகள், நாய்கள் ஆகியோரின் உடல்களை வரிசையாக அடுக்கி வைத்து விட்டு தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் போலீசார் சாந்தி உள்பட 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் 2 நாய்களின் உடல்களையும் பட்டுக்கோட்டை கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வளவன்புரம் கிராம நிர்வாக அதிகாரி சுமதி கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டுக்கோட்டையில், மகள்-2 பேத்திகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story