நலவாரிய இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்வதில் குறைபாடுகளை நீக்க வேண்டும் - கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு மனு


நலவாரிய இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்வதில் குறைபாடுகளை நீக்க வேண்டும் - கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு மனு
x
தினத்தந்தி 25 Aug 2020 11:49 AM IST (Updated: 25 Aug 2020 11:49 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்ய வசதியாக இணையதள குறைபாடுகளை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக நேற்று ஏராளமானவர்கள் வந்திருந்தனர். அவர்கள் கோரிக்கை மனுக்களை அங்கிருந்த ஒரு பெட்டியில் போட்டு சென்றனர். இதில், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி முதல் இணையதளம் மூலம் தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்கள் பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதில் விவரங்களை பதிவு செய்வதில் குறைபாடுகள் உள்ளன. குறிப்பாக ஒரே தொலைபேசி எண்ணை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும். தொழிலாளர்க ளின் ஆதார் எண்ணின் உண்மைத்தன்மை ஆராய்ந்து உறுதி செய்த பின்னரே அந்த விண்ணப்பம் ஏற்கப்படுகிறது. ஆனால் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் அதற்கான வசதி இணையதளத்தில் இல்லை. இதனால் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்வது குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் தொழிலாளர் சங்க நிர்வாகிகளுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

சிவானந்தபுரத்தை சேர்ந்த மூதாட்டி ராமாத்தாள் (வயது 90) ஆம்புலன்சில் வந்து அளித்த மனுவில், எனக்கு விளாங்குறிச்சியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் உள்ளது. அதை எனது மூத்த மகன், போலி ஆவணம் மூலம் கையகப்படுத்த முயற்சிக்கிறார். அதை தடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

கோவை மாநகர பா.ஜனதா எஸ்.சி. பிரிவு நிர்வாகிகள் அளித்த மனுவில், தற்போது பள்ளிகளில் 1 முதல் 11-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டியல் இன மாணவ-மாணவிகளின் சேர்க்கை முறையாக நடைபெறுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். பட்டியல் இன மாணவர்களின் கல்வியை உறுதி செய்ய கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு அடக்குமுறைகளை சந்திக்கின்றனர். சுல்தான்பேட்டை ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவரை அவருக்கான இருக்கையில் அமர விடாமல் சிலர் தடுக்கின்றனர். இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பட்டியலின ஊராட்சி தலைவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலின, பழங்குடியினர் நல மேம்பாட்டு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Story