இரயுமன்துறையில் 2-வது நாளாக மீனவர்கள் போராட்டம் உண்ணாவிரத பந்தலில் 2 பேர் மயங்கியதால் பரபரப்பு
இரயுமன்துறை கடற்கரை கிராமத்தில் நேற்று 2-வது நாளாக மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத பந்தலில் 2 பேர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நித்திரவிளை,
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் ஒரு பகுதியான மீன் ஏலக்கூடம் இரயுமன்துறை மீனவ கிராமத்தையொட்டி உள்ளது. இந்த பகுதிக்கு இரயுமன்துறை மீனவ கிராமம் வழியாக தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இதனால், இந்த பகுதியை சேர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகளால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.
வாகனங்கள் தங்கு தடையின்றி வந்து செல்வதற்கு வசதியாக தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தை வலுப்படுத்தி சாலை அமைக்க வேண்டும். இங்குள்ள மீன் இறங்குதளத்தில் கழிப்பறை, மின்விளக்குகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைக்க வேண்டும். இரயுமன்துறை மீனவ கிராமத்தை கடல் சீற்றத்தில் இருந்து பாதுகாக்க 3 தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இரயுமன்துறை புனித லூசியாஸ் ஆலயம் முன்பு நேற்று முன்தினம் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
போராட்டக்காரர்களுடன் கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகரன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜித் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
2-வது நாளாக
இதையடுத்து விடிய, விடிய போராட்டம் தொடர்ந்தது. இரவு முழுவதும் பலர் உண்ணாவிரத பந்தலில் படுத்திருந்தனர். நேற்று 2-வது நாளாக உண்ணாவிரதம் நடந்தது. இரயுமன்துறை பங்குத்தந்தை ரெஜீஷ்பாபு தலைமை தாங்கினார். துணை பங்குத்தந்தை செபாஸ்டின், சின்னத்துறை பங்குத்தந்தை டோணி, பூத்துறை முஸ்லிம் ஜமா அத் துணைத்தலைவர் அப்துல் ரகுமான், ஜார்ஜ் ராபின்சன், ஜெயராஜ், பங்கு நிர்வாகிகள் ஜாண் போஸ்கோ, டெல்லஸ் மற்றும் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நேற்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்ட விஜயன், வீனஸ் ஆகிய 2 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். உடனே அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால், உண்ணாவிரத பந்தலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
நேற்று இரவு நாகர்கோவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் தலைமையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, நித்திரவிளை இன்ஸ்பெக்டர் ராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை (அதாவது இன்று) காலை தக்கலை சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதையொட்டி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது என்றும், அந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால், போராட்டத்தை மீண்டும் தொடர்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story