நாமக்கல்லில் லாரியில் 300 கிலோ கஞ்சா கடத்தல் சேலத்தை சேர்ந்த 2 பேர் கைது


நாமக்கல்லில் லாரியில் 300 கிலோ கஞ்சா கடத்தல் சேலத்தை சேர்ந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2020 12:07 AM GMT (Updated: 26 Aug 2020 12:07 AM GMT)

நாமக்கல்லில் லாரி மூலம் 300 கிலோ கஞ்சா கடத்தி வந்த சேலத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சக்தி கணேசன் பொறுப்பேற்றது முதல் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் போலீசார் நாமக்கல்லில் உள்ள முருகன் கோவில் பஸ்நிறுத்தம் அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது அந்த லாரியில் 20 கிலோ எடை கொண்ட 15 கஞ்சா மூட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 300 கிலோ கஞ்சாவை போலீசார் லாரியுடன் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஏரிவளவை சேர்ந்த பழனி (வயது 55), அதே ஊரை சேர்ந்த ராஜ்குமார் (34) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குண்டர் சட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் சுமார் ரூ.41 லட்சம் மதிப்பிலான 410 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், 13 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் எச்சரிக்கை விடுத்து உள்ளார். 

Next Story