ஈரோட்டில் நடந்த போராட்டத்தில் டாஸ்மாக் ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


ஈரோட்டில் நடந்த போராட்டத்தில் டாஸ்மாக் ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Aug 2020 1:23 AM GMT (Updated: 26 Aug 2020 1:23 AM GMT)

ஈரோட்டில் நடந்த போராட்டத்தில் டாஸ்மாக் ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

தமிழ்நாட்டில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றும் டாஸ்மாக் பணியாளர்கள் உயிரிழந்தால் இழப்பீட்டு தொகையாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்பட 14 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று டாஸ்மாக் கடைகள் 2 மணி நேர அடைப்பு போராட்டம் நடந்தது.

அதன்படி ஈரோட்டில் காலை 10 மணி முதல் 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு சம்பத்நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையும் அடைக்கப்பட்டு அந்த பகுதியை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தீக்குளிக்க முயற்சி

அப்போது கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கோஷம் எழுப்பியபடி நின்றார்கள். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த டாஸ்மாக் ஊழியர் சுரேஷ் என்பவர் திடீரென்று கையில் மண்எண்ணெய் கேனுடன் வந்து, அவரது உடம்பில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு தீக்குளிப்பு முயற்சியை தடுத்தனர்.

தீக்குளிக்க முயன்ற சுரேஷ் கூறும்போது, “டாஸ்மாக் ஊழியர்கள் தொழிற்சங்கத்தின் மாநில செயலாளராக உள்ளேன். கடந்த 17 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் ஊழியர்களாக தொடர்ந்து பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், நிறைவேற்றப்படவில்லை. இந்த கோரிக்கையுடன் கொரோனா பாதிப்பில் உயிரிழக்கும் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வாரிசுகளுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட்டேன்”, என்றார்.

கொரோனா பரிசோதனை

போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சங்க கூட்டுக்குழு மாவட்ட செயலாளர் கோபால் கூறும்போது, “கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள் மாலை 5.30 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை பணி மூப்பு அடிப்படையில் நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும். கொரோனா பரவி வரும் நிலையில் அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் அண்டை மாவட்டங்களுக்கு சென்று வருவதை தவிர்க்க வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்”, என்றார்.

தீக்குளிக்க முயன்றவரை போலீசார் மீட்டு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் சம்பத்நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story