வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 26 Aug 2020 1:45 AM GMT (Updated: 26 Aug 2020 1:45 AM GMT)

வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு வந்து குவிந்துள்ள பறவைகளை பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர்-மதுரை சாலையில் வேட்டங்குடி உள்ளது. இங்குள்ள பறவைகள் சரணாலயத்தில் கொள்ளுக்குடிப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 38 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஐரோப்பா, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் கூட்டமாக வந்து இங்குள்ள மரத்தில் கூடுகட்டி தனது பறவை இனத்தை அதிகரித்து செல்லும்.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிக அளவு மழைபெய்வதால் இந்த மாதங்களில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் இந்த கண்மாய்க்கு வந்து இங்குள்ள மரங்களில் கூடு கட்டி அதில் முட்டையிட்டு அடைக்காத்து குஞ்சுகளை பொரிக்கும்.

பறவைகள் வரத்து அதிகரிப்பு

இதையடுத்து பிப்ரவரி, மார்ச் மாதங்களில் குஞ்சுகளுடன் நாடு திரும்பும். இவ்வாறு இந்த பறவைகள் ஆண்டுதோறும் தவறாமல் வந்து சென்றால் அந்த ஆண்டுகளில் விவசாயம் செழிப்பாக இருக்கும் என கிராம மக்கள் நம்பிக்கை வைத்து உள்ளனர்.

ஆனால் இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் முதலே இந்த பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் இந்த பகுதியில் உள்ள கண்மாயில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. எனவே இங்கு பறவைகள் வரத்து கடந்த 2 மாதமாக அதிகரித்து உள்ளது.

இங்கு பாம்புதாரா, கொக்கி நாரை, மார்கழியன், கருநீல அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 10 வகையான பறவைகள் தற்போது வந்து கூடு கட்ட தொடங்கி உள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்தாண்டு இங்கு வரும் பறவைகளை பார்ப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என சரணாலயத்திற்கு செல்லும் நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்க வேண்டும்

தற்போது கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் வேளையில் இங்கு வந்துள்ள பறவைகளை பார்வையிடுவதற்கும் போதிய கட்டுப்பாடுகளோடு வனத்துறையினர் அனுமதி வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story