குடிநீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை ஊராட்சி தலைவர் எச்சரிக்கை
திருவாடானை ஊராட்சியில் குடிநீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொண்டி,
திருவாடானை ஊராட்சியில் சுமார் 8 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது. இங்கு நாளுக்குநாள் புதிய குடியிருப்புகள் உருவாகி வளர்ந்து வரும் நகரமாக இருப்பதால் குடிநீர் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் திருவாடானை நகர் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நகர் பகுதியில் மட்டுமல்லாமல் பண்ணைவயல் மற்றும் சமத்துவபுரம் பகுதிகளில் வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சியில் பொது மக்களின் தேவைஅறிந்து தினமும் சீரான குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. ஆனால் வீட்டுக் குடிநீர் இணைப்புகளிலும் குடிநீர் இணைப்புகளிலும் மின் மோட்டார் வைத்து தண்ணீர் திருடுவதாக ஊராட்சி நிர்வாகத்திற்கு அதிகஅளவில் புகார்கள் வருகிறது.
இதுதொடர்பாக பலமுறை ஊராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து பலர் குடிநீரை திருடுவது, வீட்டு இணைப்புகளில் குடிநீர் மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சுவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரியவருகிறது. அதன் அடிப்படையில் திருவாடானை ஊராட்சி பகுதியில் குடிநீர் திருட்டை தடுக்க ஊராட்சி மன்ற தலைவர் இலக்கியா ராமு தலைமையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் இதுபற்றி ஊராட்சி பொதுமக்களுக்கும் வீட்டு குடிநீர் இணைப்பு பெற்றவர்களுக்கும் கடைசி முறையாக ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
மேலும் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அடங்கிய தனித்தனி குழு அமைக்கப்பட்டு திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் வைத்து திருடப்படுவது மட்டுமல்லாமல் சிலர் தேவைக்கு அதிகமாக ஆசைப்பட்டு வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் திருடுவது தெரியவந்தால் அவர்களது குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும். மேலும் அவர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருவாடானை ஊராட்சி மன்ற தலைவர் இலக்கியாராமு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story