பலத்த மழை எதிரொலி: குன்னூரில் மண்சரிவு; வீடுகள் இடிந்து விழும் அபாயம்
குன்னூரில் பலத்த மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டது. இதனால் வீடுகள் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குன்னூர் பகுதியில் பெய்த பலத்த மழையினால் பாரத் நகர் கல்குழி பகுதியில் சுமார் 52 அடி உயரத்திலிருந்து மண் சரிவு ஏற்பட்டது. மண் மற்றும் கல் உருண்டு விழுந்ததால் குன்னூர்- பந்துமி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் மாநில நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் விழுந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மண் சரிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள வீடுகள் அந்தரத்தில் தொங்குவதுபோல், இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
தடுப்புச்சுவர்
குன்னூரில் இருந்து ராணுவ பயிற்சி கல்லூரி, பாரத் நகர், பந்துமி, பெட்டட்டி ஆகியவற்றின் வழியாக கோத்தகிரி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பெட்டட்டி மற்றும் பந்துமி ஆகிய பகுதிகளை சேர்ந்த அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு பணியாளர்கள் வந்து செல்கின்றனர். இந்த சாலையில்தான் பாரத் நகர் கல்குளி என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இதனால் சாலையில் போக்குவரத்துபாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்தரத்தில் தொங்கும் வீடுகளால் எப்போது ஆபத்து ஏற்படும் என்கிற நிலை உள்ளது. மேலும் மழை வந்தால் பிரச்சினை பெரிதாகிவிடும். ஆகவே போர்க்கால அடிப்படையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story