முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூருக்கு நாளை வருகை கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்கிறார்
கடலூருக்கு நாளை வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
கடலூர்,
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்தந்த மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று கலெக்டர்களுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், 27-ந்தேதி (நாளை) காலை சென்னையில் இருந்து கடலூருக்கு சாலை மார்க்கமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு செல்கிறார். அங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை அவர் ஆய்வு செய்கிறார். பின்னர் நலத்திட்டப் பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார். பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் சிறு, குறு, நடுத்தர தொழில் பிரதிநிதிகள், விவசாயிகள், சுய உதவிக் குழுக்கள் ஆகியோருடன் அவர் கலந்துரையாடுகிறார்.
நாகை பயணம்
பிற்பகலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகை மாவட்டத்துக்குச் செல்கிறார். அங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணிகள் பற்றி ஆய்வு செய்கிறார்.
பின்னர் அந்த மாவட்டத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
திருவாரூர், தஞ்சாவூர்
மறுநாள் 28-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். அந்த மாவட்டத்தில் உள்ள நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அன்று பிற்பகலில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் பற்றி அவரது தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு வருகிறார். 29-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் மாவட்ட கலெக்டர்கள் கூட்டம், மருத்துவ நிபுணர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
கடலூரில் சீரமைப்பு பணி
முதல்-அமைசசர் வருகையையொட்டி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் வர்ணம் பூசும் பணியும், விழா மேடை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்கை புல்தரை அமைக்கும் பணி மற்றும் துப்புரவு பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர கடலூர் செம்மண்டலத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை உள்ள சாலையும், ஆல்பேட்டையில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையும் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே முதல்-அமைச்சர் வருகையையொட்டி நேற்று கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், தள்ளுவண்டி கடைகள் அகற்றப்பட்டன.
மேலும் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story