சங்கரன்கோவில் அருகே கருப்புக்கொடி ஏந்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


சங்கரன்கோவில் அருகே கருப்புக்கொடி ஏந்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Aug 2020 4:30 AM IST (Updated: 27 Aug 2020 1:44 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை திறக்க வலியுறுத்தி, கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் அருகே வடக்கு ஆலங்குளம் கிராம மக்கள், சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் நொச்சிக்குளத்தில் உள்ள ரேஷன் கடையில் சென்று, உணவுப்பொருட்களை வாங்கி வருகின்றனர். எனவே வடக்கு ஆலங்குளத்தில் கடந்த 2007-ம் ஆண்டு புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. ஆனாலும் இன்னும் அந்த ரேஷன் கடை திறக்கப்படவில்லை.

எனவே வடக்கு ஆலங்குளத்தில் புதிய ரேஷன் கடையை உடனே திறக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர். மேலும் அவர்கள், கடந்த 3 மாதங்களாக நொச்சிக்குளத்தில் உள்ள ரேஷன் கடையில் உணவுப்பொருட்களை வாங்காமல் புறக்கணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வடக்கு ஆலங்குளத்தில் புதிய ரேஷன் கடையை உடனே திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர். பின்னர் அங்குள்ள புதிய ரேஷன் கடையின் முன்பு கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே சங்கரன்கோவில் உதவி கலெக்டர் முருகசெல்வி, தாசில்தார்கள் திருமலைச்செல்வி, ஓசன்னா (குடிமைப்பொருள் வழங்கல்), சின்ன கோவிலான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மீனாட்சிநாதன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது புதிய ரேஷன் கடையை திறக்க விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Next Story