மூச்சுத்திணறலால் அவதி சிகிச்சைக்காக 4 நாட்களாக தாயுடன் அலையும் வாலிபர் மருத்துவமனைகள் படுக்கை வழங்காமல் புறக்கணித்த அவலம்


மூச்சுத்திணறலால் அவதி சிகிச்சைக்காக 4 நாட்களாக தாயுடன் அலையும் வாலிபர் மருத்துவமனைகள் படுக்கை வழங்காமல் புறக்கணித்த அவலம்
x
தினத்தந்தி 27 Aug 2020 4:00 AM IST (Updated: 27 Aug 2020 4:00 AM IST)
t-max-icont-min-icon

மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட வாலிபருக்கு மருத்துவமனைகள் படுக்கை வழங்காமல் சிகிச்சைக்காக 4 நாட்களாக அலையும் அவலம் பெங்களூருவில் அரங்கேறி உள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு கெம்பாபுரா பகுதியை சேர்ந்தவர் 35 வயது வாலிபர். இவருக்கு கடந்த 23-ந் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அந்த வாலிபரை, எலகங்காவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது தாய் அழைத்து சென்றார். ஆனால் அங்கு படுக்கை காலியாக இல்லை என்று கூறி வாலிபருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மறுத்து விட்டனர். இதனால் வாலிபரை அவரது தாய் வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளார்.

பின்னர் கடந்த 24-ந் தேதி முதல் நேற்று வரை வாலிபரை மல்லேசுவரத்தில் உள்ள கே.ஜி.அரசு ஆஸ்பத்திரி, சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு ஆஸ்பத்திரி, ஜெயநகரில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, விக்டோரியா ஆஸ்பத்திரி, அம்பேத்கர் ஆஸ்பத்திரிக்கு அவரது தாய் அழைத்து சென்றார். ஆனால் அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கை காலியாக இல்லை என்று கூறி விட்டனர். மேலும் சில தனியார் மருத்துவமனைகளும் வாலிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டன. இதனால் அந்த வாலிபருக்கு மூச்சுத்திணறல் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் அந்த வாலிபரும், அவரது தாயும் பெங்களூரு கிம்ஸ் மருத்துவமனையின் முன்பு உள்ள நடைபாதையில் அமர்ந்து உள்ளனர். இதுகுறித்து வாலிபரின் தாய் கூறும்போது, கடந்த 4 நாட்களாக மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட எனது மகனுக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிகளின் வாசலில் ஏறினேன்.

எனது மகனுக்கு சிகிச்சை அளிக்க அரசு, தனியார் மருத்துவமனைகள் முன்வரவில்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் கட்டணம் கேட்கிறார்கள். என்னால் அவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாது என்று கண்ணீருடன் கூறினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த கர்நாடக மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர், வாலிபருக்கு சிகிச்சை கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாக உறுதி அளித்து உள்ளார்.

Next Story