கொரோனா வேகமாக பரவும் நிலையில் புதுவையில் மத்திய குழுவினர் ஆலோசனை


கொரோனா வேகமாக பரவும் நிலையில் புதுவையில் மத்திய குழுவினர் ஆலோசனை
x
தினத்தந்தி 27 Aug 2020 6:07 AM IST (Updated: 27 Aug 2020 6:07 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய குழுவினர் புதுவை வந்து ஆலோசனை நடத்தினார்கள்.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 12 ஆயிரம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 180 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே கொரோனா தொற்று பரவல் தொடர்பாக கவர்னர் கிரண்பெடி மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்தார். மத்திய அரசு குழு அமைத்து உதவிடவும் கோரிக்கை வைத்தார்.

இதைத்தொடர்ந்து மத்திய அரசு ஜிப்மர் டாக்டர்கள் 3 பேரை கொண்ட குழுவை அமைத்தது. மேலும் 3 விஞ்ஞானிகளையும் அனுப்பி வைப்பதாக தெரிவித்தது.

இதன்படி இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓர் அங்கமான சென்னை தேசிய தொற்று நோயியல் நிலையத்தின் இயக்குனர் விஞ்ஞானி மனோஜ் மர்க்கேகர் தலைமையிலான விஞ்ஞானிகள் கணேஷ்குமார், நேசன் ஆகியோரை கொண்ட குழுவினர் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவை நேற்று சந்தித்து பேசினார்கள்.

அவர்கள் புதுவையில் கொரோனா தொற்று குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுவை சுகாதாரத்துறை செயலாளரும், கலெக்டருமான அருண், இயக்குனர் மோகன்குமார், இந்திய மருத்துவமுறை இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது புதுவையில் தொற்று பரவும் வேகம் குறித்து விஞ்ஞானிகள் கேட்டறிந்தனர். அதை தடுக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை மத்திய சுகாதார குழுவினர் சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது, புதுவை மாநிலத்தில் கொரோனா பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அப்போது சுகாதாரத்துறை செயலாளரும், மாவட்ட கலெக்டருமான அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story