பரமக்குடியில், 10-ம் வகுப்பு மாணவி 9 மாத கர்ப்பம் - ஏற்கனவே திருமணமானவர் கைது


பரமக்குடியில், 10-ம் வகுப்பு மாணவி 9 மாத கர்ப்பம் - ஏற்கனவே திருமணமானவர் கைது
x
தினத்தந்தி 27 Aug 2020 10:30 AM IST (Updated: 27 Aug 2020 11:00 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 10-ம் வகுப்பு மாணவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே திருமணமான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிறிஸ்தவ தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (வயது 27). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் வாடகைக்கு கார் ஓட்டி வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கும், 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அடிக்கடி மாணவியை காரில் வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக இருக்கும் படங்களை ஆபாசமாக எடுத்து செல்போனில் வைத்துள்ளார்.

இந்த நிலையில் மாணவியின் வயிறு நாளுக்கு நாள் பெரிதாகி வந்ததால் அவரது பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். உடனே அவரை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது மாணவி 9 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்பு இது குறித்து மாணவியிடம் கேட்டபோது அவர் நடந்த விவரத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஸ்டீபன்ராஜிடம் சென்று கேட்டனர். அதற்கு அவர் அவர்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரியவருகிறது.

இது குறித்து அந்த மாணவி பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டீபன்ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story