கொரோனா தொற்றை தடுக்க புதிய வழிமுறையை பின்பற்ற முடிவு - கூடுதலாக 3 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்த திட்டம்


கொரோனா தொற்றை தடுக்க புதிய வழிமுறையை பின்பற்ற முடிவு - கூடுதலாக 3 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்த திட்டம்
x
தினத்தந்தி 27 Aug 2020 12:00 PM IST (Updated: 27 Aug 2020 11:54 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கொரோனா பாதிப்பை குறைக்க புதிய வழிமுறையை பின்பற்ற முடிவு செய்து உள்ளதுடன், கூடுதலாக 3 ஆயிரம் படுக்கை கள் ஏற்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கோவை,

கோவை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்திற்கு பின்னர் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 8 ஆயிரம் பேர் வரை கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளனர். இங்கு தற்போது தினமும் 200 பேர் வரை கொரோனா தொற்று ஏற்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுவதால் கோவை வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் கொரோனா தொற்று பாதிப்பு இன்னும் அதிகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு கூடுதலாக 3 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இதுகுறித்து அரசுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவையில் சிவானந்தா காலனி, பீளமேடு தனியார் பள்ளி உள்பட 5 இடங்களில் கூடுதலாக 3 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இதனால் இடப்பற்றாக்குறை ஏற்படாது. கொரோனாவால் உயிரிழப்பதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக கொரோனா தொற்று உறுதியானவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் வேறு ஏதேனும் நோய்கள் உள்ளதா என்பதை கண்டறிவதற்காக சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் பரிசோனை மையம் நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்து உள்ளது.

இந்த மையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் உடல் ஆரோக்கியத்தை கண்டறிந்து அவர்களை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்புவதா அல்லது கொடிசியா சிகிச்சை மையம், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பவதா என்று முடிவு செய்யப்படும்.

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய வழிமுறையை கடைபிடிக்க உள்ளோம். இதன்படி கடந்த 3 மாதங்களில் எந்ததெந்த தெருக்களில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதை கண்டறிந்து, அந்த பகுதியில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த பகுதியில் கொரோனா பரிசோதனையை அதிகரிப்பது, தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, எதனால் இந்த பகுதியில் அதிக தொற்று ஏற்படுகிறது என்பதை கண்டறிவது ஆகிய பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இதன்மூலம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

கோவை தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்காக வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வந்து உள்ளனர். அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story