கல்வராயன்மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக மினிலாரியில் கொண்டு வரப்பட்ட 1,200 கிலோ வெல்லம் பறிமுதல்- டிரைவர் உள்பட 2 பேர் கைது


கல்வராயன்மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக மினிலாரியில் கொண்டு வரப்பட்ட 1,200 கிலோ வெல்லம் பறிமுதல்- டிரைவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Aug 2020 6:24 AM GMT (Updated: 27 Aug 2020 6:24 AM GMT)

கல்வராயன்மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக மினி லாரியில் கொண்டு வரப்பட்ட 1,200 கிலோ வெல்லத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

கச்சிராயபாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 171 கிராமங்கள் மற்றும் சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் வகையில் கல்வராயன்மலை அமைந்துள்ளது. இந்த மலையில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சமூக விரோதிகள் சாராயம் காய்ச்சி பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்க போலீசாரும், வனத்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் சாரயம் காய்ச்சும் சமூக விரோதிகள் போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கச்சிராயபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார்(தனிப்பிரிவு), ராஜா, பாக்கியராஜ் கல்வராயன் மலைப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மேல்முண்டியூர் வடக்குப் பகுதியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த மினி லாரியை போலீசார்வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது வைக்கோலுக்கு அடியில் 1,200 கிலோ வெல்லம், 15 கிலோ கடுக்காய் உள்ளிட்ட சில பொருட்கள் இருந்தன. கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக அவற்றை கள்ளக்குறிச்சியில் இருந்து வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மினி லாரியுடன் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் வெல்லம் கடத்தி வந்த பொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் மணி என்கிற சிவமணி(வயது 36), மேல் திண்டுக்கல் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ், கவியம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜ், சிவமணி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story