நாகர்கோவிலில் சாவிலும் இணை பிரியாத தம்பதி: கணவர் இறந்த அதிர்ச்சியில் உயிரை விட்ட மனைவி - ஒரே கல்லறையில் உடல்கள் அடக்கம்


நாகர்கோவிலில் சாவிலும் இணை பிரியாத தம்பதி: கணவர் இறந்த அதிர்ச்சியில் உயிரை விட்ட மனைவி - ஒரே கல்லறையில் உடல்கள் அடக்கம்
x
தினத்தந்தி 27 Aug 2020 12:19 PM IST (Updated: 27 Aug 2020 12:19 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரை விட்டார். இருவரது உடல்களும் ஒரே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டன. சாவிலும் இணை பிரியாத தம்பதியின் மரணம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்டு (வயது 88). இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மாநில முதுநிலை கணக்கு அதிகாரியாக பணியாற்றினார். இவருடைய மனைவி மேரி செல்லம்மாள் (88). ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை. இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருந்தனர். ஒரு மகன் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் டாக்டராக இருந்தார். மற்ற2 மகன்களும் தனியார் நிறுவன ஊழியராகவும் தொழில் அதிபராகவும் உள்ளனர். மகள்கள் கல்லூரி மாணவியாகவும், டாக்டராகவும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமன்புதூரில் டாக்டராக பணியாற்றிய மகன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மகன் இறந்த வேதனையில் ஆல்பர்டு மற்றும் அவரது மனைவி செல்லம்மாள் இருந்தனர். இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று காலை ஆல்பர்டு உயிரிழந்தார். அவரது மரணம் செல்லம்மாளை அதிர்ச்சியடைய செய்தது. இதுபற்றி அறிந்த மகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்கள் ஆல்பர்டு உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு இருந்தனர்.

இருப்பினும் கணவர் இறந்த அதிர்ச்சியில் இருந்து அவருடைய மனைவி செல்லம்மாள் மீளவில்லை. அழுது கொண்டே இருந்தார். மதியம் உறவினர்கள், இறுதி ஊர்வலத்துக்காக ஆல்பர்டு உடலை தூக்கினர். அப்போது கதறி அழுத செல்லம்மாள் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு செல்லம்மாளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது செல்லம்மாள் இறந்தது தெரியவந்தது.

இந்த எதிர்பாராத இறப்பு, மகள்கள், மகன்கள் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியது. அப்போது அங்கிருந்த உறவினர்கள் அழுதபடி கூறுகையில், அன்பிற்கும், பாசத்திற்கும் அடையாளமாய் இருந்தவர்கள் ஆல்பர்டு, செல்லம்மாள் தம்பதியினர். ஒருவருக்கொருவர் மிகவும் அன்யோன்யமாக வாழ்ந்து வந்து பலருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினர். இப்படி வாழ்விலும், சாவிலும் கூட இணை பிரியாத தம்பதியாக இருந்தது வியப்படைய செய்துள்ளதாக கூறினர்.

இதனையடுத்து மாலை 5 மணிக்கு ஆல்பர்டு, செல்லம்மாள் ஆகியோரின் உடல்கள் உறவினர்களால் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் ராமன்புதூரில் உள்ள கல்லறை தோட்டத்தில், ஒரே கல்லறையில் கண்ணீர் மல்க அடக்கம் செய்யப்பட்டன. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரைவிட்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story