ஆந்திராவில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்திய 204 கிலோ கஞ்சா பறிமுதல் - வியாபாரிகள் 3 பேர் கைது


ஆந்திராவில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்திய 204 கிலோ கஞ்சா பறிமுதல் - வியாபாரிகள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 Aug 2020 4:30 AM IST (Updated: 28 Aug 2020 4:03 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்திய 204 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வியாபாரிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு,

ஆந்திராவில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்திய 204 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வியாபாரிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தனது அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூருவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து பெங்களூருவுக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்திருந்தது. இதையடுத்து, அந்த கும்பலை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

பெங்களூரு அருகே தேவனஹள்ளி பகுதியில் வந்த ஒரு கன்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி இருந்தார்கள். இந்த சோதனையின் போது லாரிக்குள் கஞ்சா சிறு, சிறு மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மைசூருவை சேர்ந்த சமீர் (வயது 37), கைசர் பாஷா என்ற ஜாகீர் (41), சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இஸ்மாயில் ஷெரீப் (38) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களில் சமீர் தான், கஞ்சா கடத்தலில் மூளையாக செயல்பட்டவர் ஆவார். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் துனி என்ற கிராமத்தில் இருந்து கன்டெய்னர் லாரி மூலமாக பெங்களூருவுக்கு கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். அந்த லாரியில் ஒட்டு மொத்தமாக 204 கிலோ கஞ்சா இருந்தது. இதற்கு முன்பு பெங்களூருவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சிறு,சிறு வியாபாரிகள் தான் கைது செய்யப்படுவார்கள். தற்போது இந்த வியாபாரிகளுக்கே கஞ்சா வினியோகம் செய்யும் மொத்த வியாபாரிகளான 3 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து பெங்களூரு, ராமநகர், பெங்களூரு புறநகர், மைசூரு, சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் கஞ்சாவை வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு வினியோகித்து வந்தது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. கஞ்சா கடத்தலில் சமீர் ஈடுபட்டாலும், அதனை தனது கூட்டாளிகளான கைசர் பாஷா, இஸ்மாயில் ஷெரீப் மூலமாக பல்வேறு மாவட்டங்களுக்கு வினியோகம் செய்து வந்தது தெரியவந்துள்ளது.

கர்நாடகம் மட்டுமின்றி கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இவர்கள் கஞ்சா வினியோகித்து வந்துள்ளனர். இந்த கும்பலுக்கு, முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு உள்ளதா? என்பது தெரியவில்லை. அதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று (நேற்று முன்தினம்) தான் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் போது தான் கூடுதல் தகவல் கிடைக்கும். விசாரணைக்கு பின்பு கைதான கும்பலின் பின்னால் யார் இருக்கிறார்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெரியவரும்.

கைதானவர்களிடம் இருந்து 204 கிலோ கஞ்சா, ஒரு கன்டெய்னர் லாரி, கார், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலை திறமையாக செயல்பட்டு பிடித்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர்களுக்கு, ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும். இவ்வாறு கமல்பந்த் கூறினார்.

பேட்டியின் போது மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் உடன் இருந்தார்.

Next Story