இந்திப்பட இயக்குனர் மகேஷ் மாஞ்ரேக்கரிடம் ரூ.35 கோடி கேட்டு மிரட்டல் வாலிபர் கைது


இந்திப்பட இயக்குனர் மகேஷ் மாஞ்ரேக்கரிடம் ரூ.35 கோடி கேட்டு மிரட்டல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 Aug 2020 6:05 AM IST (Updated: 28 Aug 2020 6:05 AM IST)
t-max-icont-min-icon

இந்திப்பட இயக்குனரும், நடிகருமான மகேஷ் மாஞ்ரேக்கரிடம் ரூ.35 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

இந்திப்பட நடிகரும், இயக்குனருமான மகேஷ் மாஞ்ரேக்கர் மும்பையில் வசித்து வருகிறார். இவர் வாஸ்தவ், த ரியலிட்டி, அஸ்டிவிவா, விருத் போன்ற படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய பல படங்கள் தேசிய விருது பெற்றுள்ளது.

சமீபத்தில் இவருக்கு செல்போனில் குறுந்தகவல் ஒன்று வந்தது. அந்த குறுந்தகவலில், தான் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய தாதா அபுசலிம் கூட்டாளி எனவும், எங்களுக்கு உடனடியாக நீங்கள் ரூ.35 கோடி தரவேண்டும். பணம் தர மறுத்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இதுபற்றி 2 நாட்களுக்கு முன்பு தாதர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் மிரட்டி பணம் பறிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிரட்டல் குறுந்தகவல் வந்த செல்போன் எண் அலைவரிசையை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், இயக்குனர் மகேஷ் மாஞ்ரேக்கரிடம் ரூ.35 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தது ராய்காட் மாவட்டம் கேட் தாலுகாவை சேர்ந்த மெலின் துஷார்(வயது34) என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அவரை போலீசார் கைது செய்தனர்.

ஊரடங்கு காரணமாக வேலை இழந்ததால் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு தாதாவின் பெயரை கூறி இயக்குனர் மகேஷ் மாஞ்ரேக்கரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story