டெல்டா மாவட்ட மக்களை அச்சுறுத்திய ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விடை கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் காமராஜ் பேட்டி
டெல்டா மாவட்ட மக்களை அச்சுறுத்திய ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விடை கொடுத்தவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(வெள்ளிக்கிழமை) கலந்து கொள்கிறார். மேலும் பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் காமராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். அதுமட்டுமில்லாமல், மகளிர் குழுக்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் கலந்துரையாட உள்ளார்.
மேலும் நடந்து முடிந்த திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதுடன், புதிதாக தொடங்கப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். திருவாரூர் மாவட்டம் வளர்ச்சியை நோக்கி இருக்கின்ற மாவட்டம், சாதாரண மக்கள் வாழுகின்ற மாவட்டம், இந்த மாவட்டத்திற்கு முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்று 3 ஆண்டுகளில் 6 முறை எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். அது மாவட்ட வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்து வருகிறது.
தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்கிற அழுத்தமான கருத்தினை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் தமிழக அரசு உள்ளது.
இதுதொடர்்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதுதொடர்பான பதில் வந்த பிறகு நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்-அமைச்சர் அறிவித்தார். டெல்டா மாவட்ட மக்களை அச்சுறுத்தி கொண்டிருந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விடை கொடுத்தவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் திட்டத்தை செம்மைப்படுத்தி, வளர்ச்சிப்படுத்தும் விதமாக சில திருத்தங்கள் செய்யப்பட்டு நேற்று கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story