டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக சரக்கு ரெயிலில் 1,312 டன் உர மூட்டைகள் திருச்சிக்கு வந்தன
டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக ஆந்திர மாநிலத்திலிருந்து சரக்கு ரெயில் மூலம் 1,312 டன் உர மூட்டைகள் திருச்சிக்கு வந்தன.
திருச்சி,
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், அரியலூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து இரண்டு மாதத்திற்கும் மேலாக திருச்சி காவிரி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. டெல்டா மாவட்ட விவசாயிகள் நெல் பயிர்கள் நடவு செய்து தற்போது நெற்கதிர்கள் வந்துவிட்டது.
குறுவை நெல் சாகுபடிக்காக ஏற்கனவே சரக்கு ரெயில் மூலம் திருச்சிக்கு யூரியா உரமூட்டைகள் தனியார் விற்பனை நிலையங்களுக்கு வந்தன. அதே வேளையில் வேளாண் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு போதுமான உரங்கள் மானிய விலையில் கிடைப்பதில்லை என்ற குறைபாடு இருந்தது.
அதனை நிவர்த்தி செய்யும் வகையில் திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து சரக்கு ரெயில் மூலம் 21 வேகன்களில் இப்கோ நிறுவனத்தில் இருந்து 1,312 டன் யூரியா மூட்டைகள் திருச்சி ரெயில்வே குட்ஷெட்டிற்கு நேற்று வந்தன. மொத்தம் 29,180 மூட்டைகளில் உரங்கள் வந்தன.
அவற்றை சுமைதூக்கும் தொழிலாளர்கள் மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வேளாண்மை சங்கங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிக்கு அடுத்ததாக உளுந்து மற்றும் பச்சை பயிர் சாகுபடி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதுபோல ஆந்திர மாநிலத்திலிருந்து மற்றொரு சரக்கு ரெயிலில் 2,000 டன்னுக்கு மேலான சிமெண்டு மூட்டைகள் திருச்சிக்கு வந்தன. அவை லாரிகளில் ஏற்றப்பட்டு தனியார் சிமெண்டு விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story