லண்டனில் இருந்து சென்னை வந்தவர் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட கோவை பெண் தற்கொலை


லண்டனில் இருந்து சென்னை வந்தவர் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட கோவை பெண் தற்கொலை
x
தினத்தந்தி 28 Aug 2020 7:28 AM IST (Updated: 28 Aug 2020 7:28 AM IST)
t-max-icont-min-icon

லண்டனில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த கோவை பெண் ஒருவர் தனியார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா பயத்தில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலந்தூர்,

உலக நாடுகளில் கொரோனா காரணமாக சிக்கித்தவித்த இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை கடந்த மே மாதம் முதல் இயக்கி வருகிறது. இதையொட்டி, பல்வேறு நாடுகளில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு இதுவரை 68 ஆயிரத்து 306 பேர் வந்து சேர்ந்து உள்ளனர். இதில் 899 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வரக்கூடியவர்கள் அரசு கல்லூரிகளில் இலவசமாகவும், தனியார் ஓட்டல்களில் கட்டணம் செலுத்தியும் 14 நாள் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டு அதன் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த நிலையில், கடந்த 24-ந் தேதி லண்டனில் இருந்து வந்த பயணிகள் பரங்கிமலையில் உள்ள தனியார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். இங்கு லண்டனில் இருந்து வந்திறங்கிய கோவை மாவட்டத்தை சேர்ந்த மனோன்மணி (வயது 47) என்ற பெண்ணும் தங்கி இருந்தார். பரிசோதனை முடிவில் இவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது.

ஆனாலும் இவர் மேலும் ஒரு வார காலம் தங்க வைக்கப்பட்டு இருந்தார். இதற்கிடையே லண்டனில் உள்ள தனது மகளிடம் தொடர்பில் இருந்த மனோன்மணி, கொரோனா தொற்று இல்லாமல் தங்கியுள்ளது பயமாக உள்ளதாக தொடர்ந்து புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லண்டனில் உள்ள அவரது மகள் செல்போனில் மனோன்மணியை தொடர்பு கொண்ட நிலையில், அவர் நீண்ட நேரமாக போனை எடுக்காததால் சந்தேகமடைந்து நண்பர்கள் மூலம் ஓட்டலுக்கு சென்று பார்க்குமாறு தகவல் கூறினார். அப்போது அவர்கள் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, அறைக்குள் மனோன்மணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனோன்மணி கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story