இறைச்சி கடைக்குள் புகுந்து தனது கையை துண்டித்த ராணுவ வீரர்


இறைச்சி கடைக்குள் புகுந்து தனது கையை துண்டித்த ராணுவ வீரர்
x
தினத்தந்தி 28 Aug 2020 4:00 AM IST (Updated: 28 Aug 2020 8:05 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் இறைச்சி கடைக்குள் புகுந்து தனது கையை தானே கத்தியால் வெட்டி துண்டித்த ராணுவ வீரரால் பரபரப்பு ஏற்பட்டது.

கம்பம்,

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த மனோகரன் மகன் வெங்கடேசன் (வயது 37). ராணுவத்தில் பணியாற்றி வந்த இவர் கடந்த ஆண்டு ஓய்வுபெற்றார். இதையடுத்து அவர் தனது குடும்பத்துடன் கம்பத்தில் வசித்து வருகிறார். இதற்கிடையே வெங்கடேசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் வெங்கடேசன் தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் அவர், கம்பம் பஸ் நிலையம் அருகில் உள்ள இறைச்சி கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர், விறுவிறுவென்று இறைச்சி கடைக்குள் புகுந்தார். மதிய நேரம் என்பதால் அந்த கடையில் கூட்டம் இல்லை. இதற்கிடையே இறைச்சி வெட்டும் இடத்திற்கு சென்ற வெங்கடேசன், இறைச்சி வெட்ட பயன்படும் கத்தியை எடுத்தார். பின்னர் இடது கையை, அங்குள்ள மரக்கட்டையில் வைத்து வலது கையால் மணிக்கட்டு பகுதியில் 4 முறை வெட்டினார். இதில் அவரது இடது கை மணிக்கட்டு துண்டானது. இதைத்தொடர்ந்து வெட்டிய கையை கடையிலேயே போட்டுவிட்டு, கையில் ரத்தம் சொட்ட சொட்ட வெங்கடேசன் கடையைவிட்டு வெளியே வந்தார்.

ஒருசில நிமிடங்களில் வெங்கடேசன் நடத்திய இந்த செயலை கண்டு கடையில் இருந்த வியாபாரி மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள், கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாலையில் நின்று கொண்டிருந்த வெங்கடேசனை பிடித்தனர். பின்னர் துண்டான கையுடன் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அவரை போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் துண்டான கையை குளிர்சாதன பெட்டியில் வைத்து, மேல் சிகிச்சைக்காக அவரை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெங்கடேசன் எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார்? குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெங்கடேசன் தனது கையை தானே வெட்டும் காட்சிகள், இறைச்சி கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளையும் போலீசார் பதிவு செய்துகொண்டனர்.

Next Story