போலீசார் கடுமையாக தாக்கினார்களா? கூலி தொழிலாளி தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க கோரி வழக்கு - தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


போலீசார் கடுமையாக தாக்கினார்களா? கூலி தொழிலாளி தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க கோரி வழக்கு - தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 Aug 2020 3:45 AM IST (Updated: 28 Aug 2020 8:08 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் கடுமையாக தாக்கியதால் கூலித்தொழிலாளி தற்கொலை செய்ததாகவும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரிக்கக்கோரியும் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தஞ்சை மாவட்டம் மனோஜ்பட்டியை சேர்ந்த மலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை,

எனது கணவர், மணி. எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். எனது கணவர் கூலி வேலை செய்து வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வல்லம் போலீசார் அனுமதியின்றி எங்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் எனது கணவரை எங்கே என்றும், விசாரணைக்காக வருமாறும் கூறிவிட்டு சென்றனர். மேலும் அவர்கள் எங்கள் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்தநிலையில் கடந்த மே மாதம் எனது மகன் மீது தஞ்சை தமிழ்நாடு பல்கலைக்கழக போலீசார் திருட்டு வழக்குபதிவு செய்து, அவனை கைது செய்தனர். பின்னர் எனது கணவரையும் பிடித்துச் சென்று 10-க்கும் மேற்பட்ட போலீசார் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அங்கிருந்து எனது கணவர் தப்பிவிட்டார். அவர் சரணடையவில்லை என்றால் உயிருடன் இருக்கமாட்டார் என போலீசார் மிரட்டிவிட்டு சென்றனர். மேலும் எனது கணவர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

பின்னர் அந்த பகுதியில் உள்ள ஆற்றுப்படுகையில் இருந்த மரத்தில் எனது கணவர் தூக்கிட்டு பிணமாக தொங்கினார். போலீசார் தான் எனது கணவரின் சாவுக்கு காரணம் என மாஜிஸ்திரேட்டு உள்ளிட்டவர்களிடம் புகார் தெரிவித்தேன். ஆனால் சந்தேக மரணம் என போலீசார் வழக்குபதிவு செய்தனர். எனது கணவர் உடலை பிரேத பரிசோதனை செய்வதிலும் பல்வேறு பாரபட்சத்தில் போலீசார் ஈடுபட்டனர். உண்மைகளை மறைக்கவும், தடயங்களை அழிக்கவும் முயற்சி செய்கின்றனர். ஏற்கனவே போலீசார் நடத்திய தாக்குதலில் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் கொலையுண்ட வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கின்றனர். அவர்களை போலத்தான் எனது கணவரும் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே இந்த வழக்கையும் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story