கோவில் பீடத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா


கோவில் பீடத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 28 Aug 2020 11:04 AM IST (Updated: 28 Aug 2020 11:04 AM IST)
t-max-icont-min-icon

கோவில் பீடத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பழனி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பழனி, 

பழனியை அடுத்த பாலசமுத்திரம் கோட்டைக்காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று பழனி சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் திடீரென அங்குள்ள அலுவலக வளாகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது எங்கள் பகுதியில் உள்ள கோவில் பீடத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட பிரச்சினை குறித்து சப்- கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கும்படி அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள் சப்-கலெக்டர் (பொறுப்பு) அசோகனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில்கூறப்பட்டிருந்ததாவது:-

பாலசமுத்திரத்தில் எங்கள் பகுதி மக்களுக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் உள்ளது. அங்கு பல ஆண்டுகளாக பீடம் வைத்து வழிபட்டு வருகிறோம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டியை சேர்ந்த சிலர் கோவில் அமைந்துள்ள இடம் தங்களுக்கு சொந்தமானது என கூறி கோவிலில் இருந்த பீடங்களை இடித்துவிட்டனர். மேலும் எங்களை தகாத வார்த்தையில் திட்டினர்.

இதுதொடர்பாக நாங்கள் பழனி தாலுகா போலீசில் புகார் கொடுத்தும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. பின்னர் மனுவை பெற்றுக் கொண்ட சப்-கலெக்டர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story