ஸ்ரீவைகுண்டம் அருகே பாலம் கட்டுமான பணிகள் கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்


ஸ்ரீவைகுண்டம் அருகே பாலம் கட்டுமான பணிகள் கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்
x
தினத்தந்தி 29 Aug 2020 4:30 AM IST (Updated: 29 Aug 2020 12:03 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே பாலம் கட்டுமானப்பணிகளை கனிமொழி எம்.பி. நேற்று நேரில் வந்து பார்வையிட்டார்.

ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளத்தில் இருந்து கொங்கராயகுறிச்சி செல்லும் பிரதான சாலையின் குறுக்கே மருதூர் கீழக்கால் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் குறுக்கே ஆங்கிலேயேர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பாசன மடையுடன் கூடிய பாலம் வாகனப்போக்குவரத்திற்காக பயன்பாட்டில் இருந்து வந்தது. பல ஆண்டுகள் கடந்த நிலையில் உடைந்து சேதமான இந்த பாலத்தினை புதிதாக மாற்றி அமைத்திட ரூ.7 கோடி திட்ட மதிப்பீட்டில் இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வெறும் பாலம் மட்டும் கட்டப்பட்ட நிலையில் பழுதான பாசன மடை மற்றும் பாலத்திற்கான இணைப்புச்சாலை எதுவும் அமைக்கப்படாமல் இப்பணிகள் கடந்த இரண்டு வருட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை அறிந்த கனிமொழி எம்.பி. நேற்று நேரில் வந்து பாலம் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறையின் பெரும்பாலான பணிகள் அனைத்தும் பொறுப்பற்ற முறையில் தான் இருந்து வருகிறது. அதுவும் குறிப்பாக விவசாய பணிகளான பாசன மடைகள் சீரமைத்தல், குளங்களை சீரமைத்தல், நீர்வரத்து கால்வாய்களை சரி செய்தல், நீர் நிலைகளின் கரைகளை பலப்படுத்துதல் என பொதுப்பணித்துறையின் அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்ட நிலையிலேயே இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதனால் விவசாயிகள், கிராமமக்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுபோன்ற சரிவர முடிக்கப்படாத பணிகள் குறித்தும், முடிக்கப்பட்டதாக கூறப்படும் பணிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சம்பளளந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டு இப்பணிகளை முழுமையாக முடித்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஆறுமுகநயினார், அவைத்தலைவர் அருணாசலம், கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் கால்வாய் இசக்கி பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story