நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டம்


நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டம்
x
தினத்தந்தி 29 Aug 2020 6:15 AM IST (Updated: 29 Aug 2020 6:15 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை தள்ளிவைக்கக்கோரி புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா பேரிடர் காலத்தில் நீட் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் அனைத்து மாநிலங்களிலும் நுழைவுத்தேர்வை தள்ளிவைக்கக்கோரி காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கட்சி மேலிடம் அறிவித்தது. மாநில, மாவட்ட தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இந்த போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், சிறுபான்மையினர் பிரிவு தலைவர் சூசைராஜ் உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும், நீட் தேர்வை தள்ளிவைக்கக்கோரி கைகளில் பதாகை ஏந்தியிருந்தனர்.

இதேபோல் மாணவர் காங்கிரசார் புதுவை அண்ணாசிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். உண்ணாவிரத பந்தலுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி வந்து மாணவர் காங்கிரசாரை சந்தித்து பேசினார். அப்போது நீட் தேர்வு தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story