ஒரே நாளில் 604 பேருக்கு தொற்று: புதுவையில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியது


ஒரே நாளில் 604 பேருக்கு தொற்று: புதுவையில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 29 Aug 2020 6:32 AM IST (Updated: 29 Aug 2020 6:32 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் ஒரே நாளில் 604 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதலில் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே இருந்தது. ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது முதல் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

அதிலும் கடந்த ஜூலை மாதம் முதல் தொற்று வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 100 பேர் பாதிப்பு என்ற எண்ணிக்கையில் இருந்த தொற்று தற்போது நாள் ஒன்றுக்கு 300 முதல் 500 பேர் வரை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக ஒவ்வொரு நாளும் 4 முதல் 8 பேர் வரை இறந்தனர். நேற்று ஒரே நாளில் 9 பேர் இறந்துள்ளனர். இதற்கிடையே தொற்று தொடர்பாக மத்தியக்குழுவும், ஜிப்மர் குழுவும் புதுவையில் ஆய்வு நடத்தி உள்ளது.

தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கண்டறிய பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு நாளும் 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,689 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 604 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 319 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நல்லவாடு ரோடு பிள்ளையார் திட்டை சேர்ந்த 33 வயது பெண், பூரணாங்குப்பத்தை சேர்ந்த 53 வயது ஆண் ஆகியோரும், கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குரும்பாப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த 47 வயது ஆண், திருக்கனூர் காந்தி நகரை சேர்ந்த 65 வயது முதியவர், திருபுவனை விடாரிகுப்பத்தை சேர்ந்த 68 வயது பெண், ஜி.என்.பாளையத்தை சேர்ந்த 53 வயது ஆண், மூலக்குளம் பெரம்பை ரோட்டை சேர்ந்த 60 வயது முதியவர், குருவிநத்தம் பெரியார் நகரை சேர்ந்த 36 வயது ஆண் ஆகியோரும், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் பச்சூர் ஜெயம் நகரை சேர்ந்த 70 வயது முதியவரும் பலியானர்கள்.

புதுவை மாநிலத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 70 ஆயிரத்து 226 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 55 ஆயிரத்து 823 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

14 ஆயிரத்து 204 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 ஆயிரத்து 745 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 2 ஆயிரத்து 281 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 464 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 ஆயிரத்து 80 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக 571 பேர்வரை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் புதிய உச்சமாக தற்போது 604 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை 199 பேர் பலியாகி உள்ளனர். அதாவது புதுச்சேரியில் 166 பேரும், காரைக்காலில் 13 பேரும், ஏனாமில் 20 பேரும் இறந்துள்ளனர். மாகியில் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை. புதுவையில் உயிரிழப்பு 1.53 சதவீதமாகவும், குணமடைவது 62.04 சதவீதமாகவும் உள்ளது.

Next Story