மாவட்ட செய்திகள்

பூமிக்கு அடியில் எண்ணெய் குழாய் பதிப்பதால் திருவொற்றியூர் பகுதியில் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறதா? ஆய்வுக்குழு அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு + "||" + Beneath the earth Because of the oil pipe version In the Tiruvottiyur area Cracks in houses Green Tribunal Order

பூமிக்கு அடியில் எண்ணெய் குழாய் பதிப்பதால் திருவொற்றியூர் பகுதியில் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறதா? ஆய்வுக்குழு அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

பூமிக்கு அடியில் எண்ணெய் குழாய் பதிப்பதால் திருவொற்றியூர் பகுதியில் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறதா? ஆய்வுக்குழு அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
திருவொற்றியூர் பகுதியில் பூமிக்கு அடியில் எண்ணெய் குழாய் பதிப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், மீனவ தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்படுவதற்காக மணலியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்துக்கு (சி.பி.சி.எல்.) எடுத்துச் செல்ல ரூ.1,450 கோடியில் பூமிக்கடியில் புதிதாக ராட்சத குழாய் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.


பொதுமக்களுக்கும், குடியிருப்புகளுக்கும், மீன்பிடி தொழிலுக்கும் எந்தவித இடையூறும் இல்லாத வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை நிபந்தனை விதித்துள்ளது. ராட்சத குழாய் அமைக்கும் பணியை சி.பி.சி.எல். நிறுவனம் தனியார் காண்டிராக்ட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபந்தனைகளுக்கு புறம்பாக குழாய் அமைக்கும் பணியை காண்டிராக்ட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள், குடியிருப்புகள் பாதிக்கப்படாத வகையில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. ராட்சத குழாய் அமைக்க 10 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்படுகிறது. குழியை சுற்றி தடுப்பு கம்பிகள் எதுவும் வைப்பது இல்லை. இதுபோன்று தோண்டப்பட்ட குழியில் விழுந்து 5 வயது சிறுமி பலியாகி உள்ளார்.

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாததால் திருவொற்றியூர் பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, குழாய் பதிக்கும் பணிக்கு தடை விதிக்க வேண்டும். இறந்து போன குழந்தையின் குடும்பத்துக்கும், சேதமடைந்த வீடுகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால்தாஸ் குப்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் மீரா கோபால் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த தீர்ப்பாயம், ‘மத்திய சுற்றுச்சூழல் துறை, கடற்கரை ஒழுங்கு மண்டலம், நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்தக்குழு குழாய் அமைக்கும் பணியில் விதிமுறை மீறப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு 2 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்காக ஏதேனும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், எதிர்காலத்தில் இந்த குழாயில் எண்ணெய் கசிவு ஏற்படாத வகையில் அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் அறிக்கை அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.