மாவட்ட செய்திகள்

தாம்பரம் அருகே ரூ.5 லட்சம் கேட்டு ஓட்டல் உரிமையாளர் மகன் கடத்தல் + "||" + Near Tambaram Asking for Rs 5 lakh Hotel owner son abducted

தாம்பரம் அருகே ரூ.5 லட்சம் கேட்டு ஓட்டல் உரிமையாளர் மகன் கடத்தல்

தாம்பரம் அருகே ரூ.5 லட்சம் கேட்டு ஓட்டல் உரிமையாளர் மகன் கடத்தல்
தாம்பரம் அருகே ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர் மகனை மீட்ட போலீசார், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர், மதனபுரம், சுராஜ் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 44). இவர், மதனபுரம் பிரதான சாலையில் ஓட்டல் வைத்து உள்ளார். இவருக்கு நவஜீவன் (16) என்ற மகன் உள்ளார். இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.


நேற்று நவஜீவன், ஓட்டல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவரை வழிமறித்த சிலர் அவரை காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். பின்னர் தங்கராஜை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர்கள், நவஜீவனை கடத்தி விட்டதாகவும், ரூ.5 லட்சம் கொடுத்தால் மட்டுமே அவரை திரும்ப ஒப்படைப்பதாகவும் மிரட்டினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தங்கராஜ், சம்பவம் குறித்து பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தாம்பரம் போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் அசோகன் தலைமையில், சேலையூர் உதவி கமிஷனர் சகாதேவன் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும், அதில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் எண் மற்றும் மர்மநபர் பேசிய செல்போன் எண் சிக்னலை வைத்தும் விசாரணை நடத்தினர்.

அதில் நவஜீவனை கடத்திச்சென்ற கார், செங்கல்பட்டு நோக்கி சென்றுகொண்டிருந்தது தெரியவந்தது. இதுபற்றி செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோருக்கு தகவல் கொடுத்துவிட்டு, கூடுதல் துணை கமிஷனர் அசோகன் தலைமையிலான போலீசார் செங்கல்பட்டு நோக்கி சென்றனர்.

அப்போது மறைமலைநகர் பகுதியில் போலீசார், நவஜீவனை கடத்திச் சென்ற கும்பலை காரோடு மடக்கி பிடித்தனர். அதில் கடத்தப்பட்ட நவஜீவனை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் கடத்தலில் ஈடுபட்டது தங்கராஜின் ஓட்டலில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர் ஹரிகரன் (21) என்பது தெரிந்தது.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு தங்கராஜின் ஓட்டலில் வேலை பார்த்து வந்த ஹரிகரன், தங்கராஜின் உறவினர் பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாகவும், இதையறிந்த தங்கராஜ், ஹரிகரனை வேலையில் இருந்து நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரத்தில் அவரது மகனை கடத்தியதும் தெரிந்தது.

இதையடுத்து ஹரிகரன், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் விக்னேஷ் (20) மற்றும் வாடகை கார் டிரைவர் சரத்குமார் (29) ஆகியோரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை